Tuesday, March 05, 2013
சென்னை::தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரசின் உதவி தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கை தொடர்பில் கடுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு;ளளது.
இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தை பொருத்த வரையில் முக்கியமானது என்பதையும் தமிழக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த குழுவில் மத்திய அமைச்சர்களான பீ சிதம்பரம், ஜீ கே வாசன், ஜெயந்தி நடராஜன் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வற்புறுத்தி வருகிறது.
டெல்லியில் 7-ந்தேதி தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்பு?
காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் தமிழ்ஈழ ஆதரவு அமைப்பான டெசோ அமைப்பும் இலங்கைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக உள்ளது.
இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் முற்றுகை போராட்டத்தில் டெசோ அமைப்பினர் ஈடுபட்டனர். நாளை மறுநாள் (7-ந் தேதி) டெல்லியில் டெசோ அமைப்பு சார்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளும்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்புவதாகவும் கருணாநிதி இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இதற்கிடையே இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றியும் ஜெனீவா மாநாட்டில் கொண்டுவரப்படும் தீர்மானம் பற்றியும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களும், மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டனர். 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருவது பற்றியும், மக்களின் ஆதரவு பற்றியும் ராகுலிடம் விளக்கினார்கள்.
அப்போது ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். அதே நேரத்தில் டெல்லியில் நடைபெற உள்ள டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் பங்கேற்பது பற்றியும் ஆலோசித்தனர்.
அப்போது, டெசோ கருத்தரங்கம் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிப்பதுதான். காங்கிரசுக்கு எதிரானது அல்ல என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து டெசோ கருத்தரங்கில் காங்கிரஸ் பிரதிநிதி கலந்து கொள்ள ராகுல் முடிவு செய்து இருப்பதாகவும் தமிழக காங்கிரஸ் விவகாரத்தை கவனித்து வரும் குலாம்நபி ஆசாத் கருத்தரங்கில் பங்கேற்பார் என்றும் தெரிகிறது.


No comments:
Post a Comment