Tuesday, March 12, 2013

சென்னையில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின்-திருமாவளவன் கைது: 55 இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம்!

Tuesday, March 12, 2013
டெசோ நாடகத்துக்கு ஆதரவு கிடைக்காததால் மறியல் போராட்டத்தில் டெசோ அமைப்பினர் ஈடுபட்டுள்ளதாக timesofindia பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது!


சென்னை::டெசோ அமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னையில் இன்று தி.மு.க., விடுதலை சிறுத்தை, தி.க.வினர் உள்ளிட்ட டெசோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனாம்பேட்டை சந்திப்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மறியல் நடந்தது. இதில் டெசோ உறுப்பினர்கள் கி.வீரமணி, திருமாவளவன் எம்.பி., சுப.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான தொண்டர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள்.

இதனால் சுமார் 45 நிமிடம் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருமாவளவன், கி.வீரமணி உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, பெ.வி.கல்யாணசுந்தரம், வி.எஸ்.ராஜ், பூச்சி முருகன், விடுதலை சிறுத்தைகள் கொள்கை பரப்பு துணை செயலாளர் எஸ்.என். பாலாஜி, ரவிக்குமார் ஆகியோரும் கைதானர்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை அரசை கண்டிக்கும் வகையிலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தியும் டெசோ அமைப்பின் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டம் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆளும் கட்சி போராட்டத்தை நசுக்கி அடக்கி ஒடுக்க நினைத்தது. அதையும் மீறி போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்காமல் பஸ்களை இயக்குகின்றன. எனவே பொதுமக்களிடம் போராட்டத்தை பற்றி தெரிவிக்கும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி டெசோ அமைப்பு கூடி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா சாலையில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளரஜெ.அன்பழகன் தலைமையிலும், பகுதிச் செயலாளர் மதன் மோகன் முன்னிலையிலும் மறியல் நடந்தது. மறியல் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேப்பாக்கம் பகுதி நிர்வாகிகள் சுரேஷ்குமார், சிவராஜ், ஜெகதீசன், பிரபாகரன், உதயகுமார், ரவிசங்கர், சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கோதண்டம், நேரு நகர் பாட்ஷா, தாயகம் கவி, கோட்டூர் சண்முகம், அன்பரசன், மோகன் குமார், பொன் ஜெயசிங், எஸ்.குணசேகரன், சைதை சம்பத், மடுவை துரை, மின்னல் கந்தப்பன், கிண்டி ஆர்.எல்.செல்வம் உள்பட சுமார் 500 பேர் கைதானார்கள்.

கே.கே.நகரில் பகுதி செயலாளர் க.தனசேகரன் தலைமையில் மறியல் நடந்தது. இதில் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், துரைராஜ், சுப.முத்துவேல், முருகேசன், லோகு, மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், விருகை இளங்கோவன், எஸ்.டி.தங்கராஜன் உள்பட 800 பேர் கைதானார்கள்.

திருவான்மியூர் பஸ் நிலையம் அருகே பகுதி செயலாளர் ரவி தலைமையில் மறியல் நடந்தது. இதில் 300 பேர் கைதானார்கள். சென்னை கடற்கரை சாலையில் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் காமராஜ் தலைமையில் 250 பேரும், மயிலாப்பூர் லஸ் கார்னரில் பகுதி செயலாளர் வேலு தலைமையில் 300 பேரும், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் அன்பு துரை தலைமையில்

தேனாம்பேட்டையில் 200 பேரும், அண்ணாநகர் பகுதி செயலாளர் ராமலிங்கம் தலைமையில் அண்ணா வளைவு அருகே நடந்த மறியலில் 300 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தி.நகர் பஸ் நிலையம் அருகே பகுதி செயலாளர் ஏழுமலை தலைமையில் மறியல் நடந்தது. இதில் ஜெ.கருணாநிதி, பொன்னுரகம், வெல்டிங் மணி, பழனி, கஜேந்திரன், சத்யா, உதயசூரியன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். மியூசிக் அகாடமி அருகில் சிற்றரசு தலைமையில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்பட 150 பேர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் தலைமையில் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி முன்பு சாலை மறியல் நடந்தது. நிர்வாகிகள் நெடுமாறன், கமலக்கண்ணன், சேலை வாயல் சிவசங்கர், மணல்ரவி உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொளத்தூர் பகுதி பொறுப்பாளர் ஐ.சி.எப். முரளிதரன் தலைமையில் அகரத்தில் மறியலில் ஈடுபட்ட வக்கீல் கிரிராஜன், கவுன்சிலர் தேவஜவகர் உள்ளிட்ட 300 பேர் கைதானார்கள்.

புதுவண்ணாரப்பேட்டையில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு தலைமையில் நடந்த சாலை மறியலில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் டி.எச்.ரோட்டில் பகுதி செயலாளர்கள் டன்லப் ரவி, கட்பீஸ் பழனி, முன்னாள் எம்.எல்.ஏ. மதிவாணன், துணை பகுதி செயலாளர் ஏ.டி.மணி உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூளை சால்ட் குவாட்டர்ஸ் அருகில் வடசென்னை மாவட்ட துணை செயலாளர் வா.தேவராசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வில்லிவாக்கம் பகுதி செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சிட்கோ வாசு, ஜெயின், சீனிவாசன், சவுந்தர், வாசு, மோகன் உள்ளிட்ட 200 பேர் அயனாவரம், வில்லிவாக்கம், திருமங்கலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. டி.சி.விஜயன், கவுன்சிலர் கே.பி.சங்கர், முருகேசன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். திருவொற்றியூர் நகர செயலாளர் தனியரசு, மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி கணேசன் தலைமையில் தேரடியில் மறியல் செய்தனர். ராஜபக்சே கொடும்பாவியை எரிக்க முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

செங்குன்றம் பஸ்நிலையம் அருகில் நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 110 பேரும், ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமையில் சோத்துப்பாக்கம் சந்திப்பில் மறியல் செய்த 120 பேரும், காரனோடையில் மறியலில் ஈடுபட்ட சோழவரம் ஒன்றிய செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் 160 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கத்திவாக்கத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து முன்னாள் நகர சபை தலைவர் திருசங்கு நகர செயலாளர் பாண்டியன் உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குன்றத்தூர் தேரடி அருகே காஞ்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒன்று திரண்டு ராஜபக்சே கொடும்பாவியை எரித்தனர். இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் உள்பட பாஸ்கர், செல்வசீமான், பேரூர் செயலாளர் கே.கே.ராஜமாணிக்கம், திருநாவுக்கரசு, கோவூர் குமாரவேல், அபி புனிசா, குணசேகரன் உள்பட ஏராளமான பேர் கைதானார்கள்.

குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் படப்பையில் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

ஆலந்தூர் நகர தி.மு.க. சார்பில் நகரசெயலாளர் குணாளன் தலைமையில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஆ.துரைவேலு, என்.சந்திரன், எம்.எஸ்.கே. இப்ரகீம், கோல்டு பிரகாஷ், கே.ஆர்.ஜெகதீஸ்வரன் உள்பட 100 பேர் ஆலந்தூரில் மார்க்கெட் பகுதியில் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

மேடவாக்கத்தில் திமுக ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மூர்த்தி, ஜி.கே.ரவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் விடுதலை ஆரோன் உள்பட 50 தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணையில் முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் வி.பாபு தலைமையில் தி.மு.க.வினர் கடையடைப்பு செய்ய கோரி நோட்டீஸ்களை வழங்கினார்கள். மடிப்பாக்கத்தில் உள்ளகரம்-புழுதிவாக்கம் நகர தி.மு.க. செயலாளர் சம்பத் தலைமையில் போராட்டம் செய்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாம்பரம் சண்முகம் சாலையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.எஸ்.ஆர்.ராஜா உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலவாக்கம் விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் ஆகியோர் தலைமையில் மறியல் நடந்தது. இதில் கவுன்சிலர் அரவிந்த் ரமேஷ், பெருங்குடி லிங்கேஸ்வரன், ஈஞ்சம்பாக்கம் சக்திவேலன், ஏகாம்பரம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம் நகரச் செய லாளர் இ.கருணாநிதி 500 பேருடன் திரண்டு வந்து பல்லாவரத்தில் மறியலில் ஈடுபட்டார். அவருடன் நகர அவைத் தலைவர் என்.சி.கோவிந்தன், வட்ட செலயாளர் ஜோசப், பாக்கியராஜ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அண்ணா சிலை அருகே நகர்மன்ற தலைவர் சா.மு.நாசர் தலைமையில் மறியல் நடந்தது. இதில் நகர்மன்ற துணைத்தலைவர் கலைசேகர், ராஜேந்திரன், சேகர், சிங்காரம் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அம்பத்தூர் பஸ்நிலையம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் ஜோசப் சாமுவேல், நீலகண்டன், நாதன், மூர்த்தி, ரவி உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி தலைமையில் மறியலில் ஈடுபட்ட தாஸ், பொன் விஜயன், ஆண்ட்ரோஸ் உள்ளிட்ட 50 பேர் கைதானார்கள்.

போரூர் ரவுண்டானாவில் மறியலில் ஈடுபட்ட வில்லிவாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காரம்பாக்கம் கணபதி, அயப்பாக்கம் வீரமணி, போரூர் அருணாசலம், அன்பழகன், செல்வக்குமார் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரவாயல் மார்க்கெட் அருகே ஆலம்பாக்கம் சண்முகம், மாதவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் 250 மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். இன்று மதியம் 12.30 மணியளவில் சென்னையில் 55 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றிருந்தது. இதில் 300 பெண்கள் உள்பட 5 ஆயிரம் பேர் கைதானார்கள்.

கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய நலச்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று மாலை வரை மேலும் பல இடங்களில் தி.மு.க.வினர் மறியல் செய்ய வாய்ப்புள்ளதால் கைது எண்ணிக்கை கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment