Wednesday, March 27, 2013
சென்னை::இலங்கையை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் முற்றுகை, சாலை மறியல், உண்ணாவிரதம், ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி இன்று காலையில் கலங்கரை விளக்கம் அருகில் 120 மாணவர்கள் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு புலிகள் ஆதரவு தமிழீழ மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா தலைமை தாங்கினார். இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்து மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். பகல் 12 மணியளவில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை பாடை கட்டி எடுத்து வந்த அவர்கள் அதை நடுரோட்டில் போட்டு சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
அப்போது ஒப்பாரி பாடல்களையும் அவர்கள் பாடினார்கள். பின்னர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். இதைத்தொடர்ந்து கையில் பூட்டுகளுடன் வானொலி நிலையத்தை நோக்கி சென்ற மாணவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் ரோட்டில் அமர்ந்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேன்களில் ஏற்றினர். அப்போது இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மாணவர்களை வேனில் ஏற்றி போலீசார் அவர்களை வேகமாக உள்ளே தள்ளினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில மாணவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை போலீசாரை நோக்கி வீசினார்கள். அப்போது போலீசாருக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அனைவரும் 2 வேன்களில் அருகில் உள்ள திருமண மண்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த போராட்டம் காரணமாக வானொலி நிலையத்தை சுற்றி போலீசார் சுமார் 5 இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். மெரீனா கடற்கரையில் இருந்து சாந்தோம் வீதியாக அரசு பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. வேறு எந்த வாகனமும் அந்த வழியே செல்லவில்லை. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை மெரீனா காவல்நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டன. துணை கமிஷனர்கள் லட்சுமி, பவானீஸ்வரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் இளைய ராஜா கூறும் போது, திருச்சியில் காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது போன்ற அடக்கு முறைகளால் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது. அது மேலும் வீரியமாகும் என்றார்.
பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கல்லூரி அருகே ரேடியல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். குறைந்த அளவே போலீசார் பாது காப்பு பணியில் இருந்ததால் மாணவர்கள் பஸ்சின் ஜன்னல் வழியே எகிறி குதித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மாணவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். தண்டடையார் பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வட சென்னை மாவட்ட துணை செயலாளர் சவுந்தர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் சாலையில் மறியல் செய்தனர். இலங்கை அரசுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பி ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

No comments:
Post a Comment