Monday, February 18, 2013

இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் தமக்குக் கீழ் இயங்கவில்லை - யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க!

Monday, February 18, 2013
இலங்கை::யாழ். மாவட்டத்தில் படைத்தளபதி இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருக்கும் சந்தேகத்தை யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நிராகரித்துள்ளார்.

இராணுவத்தினரைத் தவிர வேறு எந்த ஆயுதக் குழுக்களும் தமக்குக் கீழ் இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ரணில் விக்கிரமசிங்க, யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பதாக சந்தேகிப்பதாகவும் தனது குற்றச்சாட்டில் உண்மையில்லை எனில் தமது பக்க நியாயத்தை அவர் எழுத்து மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


வலிகாமம் வடக்கில் மக்களை மீள குடியமர்த்துமாறும் அங்குள்ள வீடுகள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறும் வலியுறுத்தி அங்கு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது சிலரால் குழப்பம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டை அவர் முற்றாக நிராகரித்தார்.

எனக்குக் கீழ் 13,500 படையினர் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் ஆயுதம் தாங்கியவர்கள். அவர்கள் மக்களின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் தவிர வேறு எந்த இராணுவமும் எனக்குக் கீழ் இயங்கவில்லை' என்று மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க இதன்போது கூறினார்.

No comments:

Post a Comment