Thursday, February 21, 2013
இலங்கை::மன்னார் மாவட்ட மீனவர்கள் மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் இன்று வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இந்திய மற்றும் உள்ளூர் இழுவைப் படகுகளின் தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும், கடற்படையினரின் பாஸ் நடைமுறை நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக கடற்றொழிலாளர் அடையாள அட்டை மாத்திரம் வழங்கப்பட வேண்டும், சிலின்டர் மூலம் கரையோரத்தில் தொழில் செய்வதை நிறுத்தி ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாத்திரம் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் ஆகிய மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில், மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாச காரியாலயத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து அந்த மாவட்ட செயலாளர் சரத் ரவீந்திரவிடம் மீனவர்களின் மூன்றம்சக் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
மட்டுப்படுத்தப்பட்ட மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறச் சங்கங்களின் சமாச தலைவர் நூர் முஹமட் முகம்மது ஆலம் தலைமையிலான குழுவினரே மாவட்டச் செயலகத்தினுள் சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரை கையளித்ததுடன், தங்களது பிரச்சினைகளையும் முன்வைத்தனர்.
இருப்பினும் மன்னார் மாவட்டச் செயலாளர் இதற்கான உறுதிமொழிகள் எதனையும் வழங்கவில்லை. இந்த நிலையில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தாம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் தமக்கு ஒரு வாரகால அவகாசம் தருமாறும் வேண்டுகேள் விடுத்தார்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்; மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான மீனவர்கள் எவரும் தொழிலுக்குச் செல்லாமல் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இது இவ்வாறிருக்க இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்கினர்.
.jpg)
No comments:
Post a Comment