Tuesday, February 26, 2013
சென்னை::ஐதராபாத் குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழக கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களுக்குள் செல்போன் எடுத்து செல்லவும், வெளியில் உள்ள கடைகளில் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் இறந்தனர். 117 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக கோயில்களுக்கும் சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில்களில் எல்லா நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர் கேட் அமைக்கவும், கோயிலுக்குள் எல்லா பக்கமும் சிசிடிவி கேமரா பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
செல்போனுடன் வரும் பக்தர்கள், செருப்பு வைக்கும் இடம் அருகே அமைக்கப்பட்டுள்ள செல்போன் பாதுகாப்பிடத்தில் போனை கொடுத்து விட்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அறநிலைய துறை ஆணையர் தனபால் கூறியதாவது: ஐதராபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, பழநி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட கோயில்களுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோயில்களில் கண்காணிப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய கோயில்களில் ஏற்கனவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எல்லா கோயில்களிலும் உள்ள கண்காணிப்பு அம்சங்களை இந்து அறநிலைய துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்தே கண்காணிக்கும் வகையில் கம்ப்யூட்டர் சர்வர்கள் பொருத்தப்பட உள்ளன.
தமிழகத் கோயில்களுக்கு மிரட்டல் இல்லை என்றாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆணையர் தனபால் கூறினார். காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், கோயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார், பைனாகுலர் உதவியோடு உயரமான இடங்களில் நின்று கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களில் நான்கு பக்கமும் கண்காணிப்பு டவர் அமைக்கப்பட்டு அதிலும் சுழற்சி முறையில் போலீசார் நின்று கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களுக்கு வெளியே உள்ள கடைகளில் பேட்டரியால் இயங்கும் எந்த ஒரு பொருளோ, பொம்மையோ, விளையாட்டு சாதனங்களோ விற்பனை செய்ய கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அறநிலைய துறை சார்பில் கோயில்களில் ஜாமர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 38,491 கோயில்கள் உள்ளன.
199 கோயில்களில் கண்காணிப்பு
தமிழகத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள் பட்டியலில் 34,265 கோயில்களும், ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள் பட்டியலில் 3,563 கோயில்களும் உள்ளன. ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ள கோயில்கள் (ஸ்பெஷல்) என்ற பட்டியலில் 464 கோயில்களும் ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள் (சூப்பர் ஸ்பெஷல்) என்ற பட்டியலில் 199 கோயில்களும் உள்ளன. முதல் கட்டமாக இந்த 199 கோயில்களிலும் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment