Saturday, February 16, 2013

புலிபயங்கரவாதிகளுடன் யுத்தம் நடைபெற்ற நாடு என்கின்ற அதேநேரம், யுத்தம் நிறைவடைந்து சில வருடங்களில் இலங்கை துரிதமான மாற்றங்களை கண்டிருக்கிறது: உலகில் மிக அமைதியான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருக்கிறது - கோதாபய ராஜபக்ஷ!

Saturday, February 16, 2013

இலங்கை::தசாப்தகால யுத்தம் நிறைவடைந்து சில வருடங்களில் இலங்கை துரிதமான மாற்றங்களைக் கண்டிருப்பதாகத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, கொழும்புக்கு வெளியிலும் அதேபோல் புதிய துறைகளிலும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு தாமரைத் தடாகம் மகிந்த ராஜபக்ஷ அரங்கில் நேற்று வெள்ளிக் கிழமை நடைபெற்ற ரோட்டரி கழகத்தின் 22 ஆவது மாவட்ட மாநாட்டில் பிரதான உரையாற்றும் போதே கோதாபய ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.

'உலகின் மிகவும் கடுமையான புலிபயங்கரவாதிகளுடன் யுத்தம் நடைபெற்ற நாடு என்கின்ற அதேநேரம், யுத்தம் நிறைவடைந்து சில வருடங்களில் இலங்கை துரிதமான மாற்றங்களை கண்டிருக்கிறது. இன்று உலகில் மிக அமைதியான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் இருக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பிராந்திய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்ட பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்துள்ளனர்.

ஏற்கெனவே பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் 58 ஆவது மாநாடு இங்கு நடைபெற்ற நிலையில், பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாடு இவ்வருட இறுதியில் இங்கு நடைபெறவுள்ளது. அதேபோல் ருவென்ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிகளும் கடந்த வருடம் நடைபெற்றன.

இலங்கையில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் இருப்பதாக நம்பப்படுவதாலேயே இவையனைத்தும் இடம்பெறுகின்றன. முதலீடுகளை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கணக்கியல், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் என பல்வேறு துறைகளிலும் சிறந்த துறைசார் நிபுணர்கள் வருடாந்தம் வெளியாகி வருகின்றனர்.

இன்று கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. கொழும்பில் ஏழ்மை நிலையில் இருக்கும் 17 ஆயிரம் குடும்பங்களுக்கு சகல வசதிகளுடனும் கூடிய புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன.

இதேநேரம், கொழும்புக்கு வெளி மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய துறைகளிலான முதலீடுகளும் வர வேண்டியது அவசியம். நாட்டில் அனைவரும் சுபிட்சமான எதிர்காலத்தை அனுபவிக்கும் நிலைமைகள் உருவாக வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment