Wednesday, February 13, 2013

ஒவ்வொரு விடியலும் அச்சமூட்டுகிறது - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய்!

Wednesday, February 13, 2013

சென்னை::ஒவ்வொரு விடியலும் என்னை அச்சமூட்டுகிறது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாயாரான அற்புதம்மாள், எனது மகன் பேரறிவாளன் அப்பாவி என்றும், நீதி அவருக்கு வழங்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். அஜ்மல் குரு மற்றும் அப்ஸல் குரு ஆகியோருடன் பேரறிவாளனை ஒப்பிட முடியாது எனத் தெரிவித்த அற்புதம்மாள், 22 வருடமாக சிறையில் வாடும் ஒரு அப்பாவியைச் சட்டத்தினை பயன்படுத்தி தூக்கில் போடக் கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்ற இருவர் ஆவர். இவர்களின் மனுவினை விசாரித்த உச்சநீதி மன்றம், தண்டனையினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது சம்பந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவர்களது கருணை மனுவினை முன்னாள் ஜனாதிபதி நிராகரித்த நிலையில், தற்போதுள்ள ஜனாதிபதியிடம் மீண்டும் ஒரு முறை கருணை மனு அளிக்க உள்ளதாகவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.

அஜ்மல் கசாபின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு தனது மகனை வேலூர் சிறையில் சந்தித்ததாக அற்புதம்மாள் தெரிவித்தார். தனது மகன் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறையிலிருந்து படித்தவர்களில், பேரறிவாளன் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்றதையும், சிறையிலிருந்தவாறு பிற மனிதர்களை சீர்திருத்தம் செய்யும் பணியல் பேரறிவாளன் ஈடுபட்டு வருவதையும் அற்புதம்மாள் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment