Wednesday, February 6, 2013

கடலில் நடந்தது என்ன? மீனவர் கண்ணீர் பேட்டி!

Wednesday, February 06, 2013
நித்திரவிளை::பூத்துறை, இரயுமன்துறை பகுதிகளில் இருந்து கடலில் மீன்படிக்கச் சென்று மாயமாகி, இலங்கையில் கரையேறிய மீனவர்கள் கடலில் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் கூறினர்.பூத்துறை, இரயுமன்துறை பகுதிகளில் இருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் மூன்று பேரை இலங்கை மீனவர்கள் மீட்டுள்ளனர். கடலில் நடந்த சம்பவம் குறித்து, இலங்கையில் பத்திரமாக இருக்கும் மீனவர்களில் ஒருவரான சேவியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது:பூத்துறையைச் சேர்ந்த நான் எனக்குச் சொந்தமான பைபர் படகில், இதேப்பகுதியைச் சேர்ந்த அருளப்பன் மகன் வறுவேல்(58), இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த ஈசாக் மகன் ஜோய்(34), இரயுமன்துறையைச் சேர்ந்த ஜெர்மான்ஸ் மகன் அமல்ராஜ்(33) ஆகியோருடன் கடலில் மீன் பிடிக்க, கடந்த 30ம் தேதி சென்றோம். கடலில் சூறைக்காற்று வீசியதால் எங்கள் படகு பழுதாகி விட்டது.

கடலில் விழுந்த நாங்கள் நான்கு பேரும், படகைப் பிடித்து தொங்கியபடி உயிரைக் காப்பாற்றப் போராடினோம். எங்கள் ஒவ்வொருவரின் உயிரும் முக்கியமானதால், எங்களால் அடுத்தவருக்கு உதவி செய்ய முடியவில்லை. இரண்டு நாட்கள் உண்ண உணவின்றி, கடல்நீரைக் குடித்து உயிர் வாழ்ந்தோம். எங்களில் வறுவேல் என்பவர் தலையில் பலத்த காயம் அடைந்து, எங்களுடன் படகில் தொங்கிக் கொண்டிருந்தார்.உயிர் போகும் நிலையில் இருந்த எங்களின் நிலை கண்ட இலங்கை மீனவர்கள் எங்களை மீட்டனர். அப்போதுதான், வறுவேல் எங்களுடன் இல்லை என்ற சம்பவம் எங்களுக்குத் தெரிந்தது.

பொதுவாக, பைபர் படகுகளில் மீன்படிக்கச் செல்பவர்கள் மதியம் சென்றால், மறுநாள் காலையில் கரைக்குத் திரும்பி விடுவார்கள். நாங்கள் நான்கு பேரும், மூன்று தினங்கள் கடந்த பிறகும் கரை வந்து சேராததால் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதனால், தற்போது எங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளோம். இங்கு இலங்கையில் நீர்க்கொழும்பு என்ற இடத்தில் நாங்கள் கரை சேர்ந்துள்ளோம். எங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், நெகம்பு மெடிக்கல் காலேஜில் சிகிச்சைப் பெற்று வருகிறோம். நாங்கள் ஊருக்குச் செல்ல, இந்திய அரசு சார்பில் இலங்கை அரசுடன் பேசி, தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு சேவியர் கூறினார்.மூன்று மீனவர்கள் பத்திரமாக உள்ளனர். தமிழ் தெரிந்த போலீசார் பாதுகாப்பில் உள்ளனர் என்ற விவபமும் கிடைத்துள்ளது. வறுவேல் என்ன ஆனார் என்பது குறித்து தகவல் எதுவும் இல்லை. மற்ற மூன்று பேரும் பாதுகாப்பாக உள்ளனர் என போன் வழி தகவல் அவர்களின் வீடுகளுக்கு எட்டியுள்ளதால், இவர்களின் குடும்பத்தார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

No comments:

Post a Comment