Tuesday, February 19, 2013

இராணுவ தேவைகளுக்காக வடக்கில் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் புலிகளின் போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடரும் - இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய!

Tuesday, February 19, 2013

இலங்கை::இராணுவ தேவைகளுக்காக வடக்கில் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் கிழக்கு மாகாணத்தில் முன்னாள் புலிகளின் போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளும் தொடரும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

காணி சுவீகரிப்பு மற்றும் முன்னாள் போராளிகள் தொடர்;ச்சியாக கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது தொடர்பில் கேட்கப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் புலிகளின் போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் இதுவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதிருந்தால் அவர்கள் முறையான புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என்று அடையாளம் காணப்படும் முன்னாள் புலிபோராளிகள் அனைவரும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்படாத முன்னாள் புலிகளின் போராளிகள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாமல் மறைந்திருந்தவர்களும் இருக்கின்றனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் மக்களுக்கு தொந்தரவாக இருப்பவர்கள் என்று கிடைக்கின்ற முறைப்பாடுகளின் படியே சிலர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

புலிகளின் முன்னாள் தலைவர்களும் அவர்களின் போராளிகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அவர்கள்இயல்பாகவே புனர்வாழ்வு அடைந்துவிட்டதாகவும் அவர்களால் சமூகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

இராணுவ முகாம்கள் நாட்டுக்கு அவசியம் என்பதால் முகாம்கள் அமைந்துள்ள காணிகள் கையகப்படுத்தப்படும்

இதேவேளை, வடக்கில் பலாலி இராணுவத் தளமும் ஏனைய இராணுவ முகாம்களும் அமைந்திருக்கும் காணிகளை இராணுவத் தேவைகளுக்காக கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் போன்ற மையங்களை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் தேவைகளுக்காகவும் அரசாங்கம் குறித்த காணிகளை கையேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

அபிவிருத்திப் பணிகளுக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்க வேண்டியது அவசியம் என்றும் காணிகளை இழக்கும் மக்களுக்கு இழப்பீடும் மாற்றிடங்களும் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

இதேவேளை, 2009-ம் ஆண்டில் வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருந்த சுமார் 4500 ஹெக்டேர் பரப்புக் காணி இப்போது 2000 ஹெக்டேராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் 15 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment