Sunday, February 3, 2013

தான்தோன்றித்தனமாக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிப்பது பெரும் வேதனையை அளிப்பதாக அமைந்துள்ளது!

Sunday, February 03, 2013
இலங்கை::30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து மூன்றாண் டுகளும் உருண்டோடி விட்டன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் மனதில் இருந்த வேதனை வடுக்களும் இப்போது மறைந்து கொண்டிருக்கின்றன. மக்கள் இனிமேல் எக்காரணம் கொண்டும் யுத்தம் ஏற்படக் கூடாது, நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்களைப் போன்று ஒற்றுமையாக வாழ வேண்டுமென்று திடசங்கட்பம் பூண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் மக்களின் கடந்த கால துன்ப, துயரங்களை மறக்கச் செய்வதற்கு உறுதுணை புரியக்கூடிய வகையில் யுத்தத்தின் போது மக்களை துன்புறுத்தியவர்களை இனங்கண்டு அவர்களை சட்டபூர்வமான முறையில் இப்போது தண்டித்தும் வருகின்றது.

யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட பொருள் இழப்புக்களை ஈடுசெய்வதற்காக அவர்கள் வாழ்ந்த இடங்களை மீள்நிர்மாணம் செய்து, அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு சகல விதமான உதவிகளையும் செய்து வருகின்றது. யுத்தத்தினால் பழுதடைந்திருந்த வடக்கு, கிழக்கில் உள்ள பாதைகள் அனைத்தையும் புனர்நிர்மாணம் செய்ததுடன் இவ்விரு பிரதேசங்களில் நெடுஞ்சாலைகளையும் நிர்மாணித்து முடித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக பல பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கான தரைவழிப் பாதைப் பயண நேரம் பெருமளவில் குறைந்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பகுதியை அரசாங்கம் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. உட்கட்டமைப்பு வசதிகள் செய்து முடித்தவுடன் ஏனைய பரிந்துரைகளும் நிறைவேற்றப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் உறுதிமொழியும் அளித் துள்ளார்கள்.

யுத்தத்தையும் அதனால் ஏற்பட்ட இழப்புகளையும் துன்ப, துயரங்களையும் பாதிக்கப்பட்ட நம்நாட்டு மக்கள் மறந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வேளையில், எங்கள் மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர்களைப் போன்று வெளிநாட்டு வல்லரசுகள் குறிப்பாக அமெரிக்கா நடந்து கொள்வது எமக்கு பெரும் விசனத்தை அளிக்கின்றது.

யுத்தத்தைப் பற்றியும் அப்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றியும் மறந்து கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இலங்கையையும், நம்நாட்டு மக்களையும் கிள்ளிவிட்டு எங்கள் வேதனையில் இன்பம் அனுபவிக்கும் குள்ளத்தனமான சர்வதேச ராஜதந்திரத்தை இந்த வல்லரசுகள் கடைப்பிடித்து வருவது கண்டனத்திற்குரிய செயலாகும்.

மற்ற நாடுகளில் எவ்வித அச்சமும் இன்றி மனித உரிமைகளை மீறிவரும் அமெரிக்கா, இலங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் மனித உரிமைகள் இங்கு மீறப்பட்டன என்ற வழமையான குற்றச்சாட்டை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப் போவதாக எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூன்று உதவிச் செயலாளர்கள், வடக்கில் அபிவிருத்திப் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெறுவதாக அங்கு சென்று பார்த்த பின்னர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். இது தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளி விடுவதைப் போன்ற செயலாகும்.

அரசாங்கம் ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 50சதவீதத்திற்கும் அதிகமானவற்றை நிறைவேற்றி இருக்கிறது. அரசாங்கத்தின் இந்த நேர்மையான அறிவிப்புகளை உதாசீனம் செய்துவிட்டு தான்தோன்றித்தனமாக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயற்சிப்பது பெரும் வேதனையை அளிப்பதாக அமைந்துள்ளது.

யுத்தம் நடக்கும் போது சிறிதளவு மனித உரிமைகள் மீறப்படுவதை எவரும் தவிர்க்க முடியாது என்பதை அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கப் படைகள் அப்பாவி மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுத்தள்ளும் போது அமெரிக்க அரசாங்கம் அதைப்பற்றி பெரிதுபடுத் துவதில்லை. இது தங்கள் படையினரின் ஒரு சிறு தவறென்று அறிவித்துவிட்டு, அந்தக் குற்றச்சாட்டு பற்றி விசாரணை எதனையும் செய்யாமல் மூடி மறைத்து விடுவதுண்டு.

30 ஆண்டு காலம் இலங்கை இராணுவத்துடன் யுத்தத்தில் ஈடுபட்ட புலிகளை எதிர்த்து இராணுவம் எதிர்த்தாக்குதல் செய்த போது இரு தரப்பிலும் மனித உயிரிழப்புகள் இடம்பெற்றன. இதனை எவராலும தவிர்க்க முடியாது. ஆனால், மக்களை கேடயமாக பயன்படுத்தி அவர்களுக்கு பின்னால் மறைந்திருந்து எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் அரசாங்கப் படைகளை யுத்தம் செய்த போது, எமது படைகள் மக்களுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான முறையில் யுத்தத்தை நடத்தின. இத்தகைய சூழ்நிலையில் யுத்தநிலை பற்றி நன்கு அறிந்துள்ள வல்லரசு நாடான அமெரிக்கா, நடந்த யதார்த்தபூர்வமான நிகழ்வுகளை நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அதற்கு பதில், அமெரிக்கா தனது படைகள் மனித உரிமை மீறல்களை யுத்த முனையில் புரிந்திருந்தால் அதனை மன்னிக்கலாம். ஆனால், இலங்கை யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களை புரிந்துள்ளது என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி எங்கள் மீது அநியாயமான பழியை சுமத்துகின்றது. இனிமேலாவது அமெரிக்க அரசாங்கம் சிறிய நாடுகளுக்கு இத்தகைய துன்புறுத்தல்களை செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment