ஐதராபாத்::ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் குண்டுகளை வைத்தனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம் பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுகள் வெடித்த தில்சுக் நகரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளூர் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் தீவிரவாதிகள் நன்கு திட்டமிட்டு, 2 தடவை ஒத்திகை பார்த்து இந்த குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுவரை உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கா விட்டாலும் தீவிரவாதிகளின் சதி பற்றிய விவரங்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் தொகுத்துள்ளனர். அதன்படி தில்சுக்நகர் குண்டு வெடிப்பை 3 பேர் ஒருங்கிணைந்து நடத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவன் அம்மோனியம் நைட்ரேட் கலவை கொண்ட வெடிகுண்டுகளை தயாரிப்பதில் மிகவும் நிபுணத்துவம் கொண்டவனாக இருப்பான் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமோனியம் நைட்ரேட் கலவையில் வெடிகுண்டு தயாரிக்கும்போது சிறு தவறு நடந்தாலும் அது உடனே வெடித்து சிதறி விடும். எனவே குண்டுகளை தயாரிப்பதில் கை தேர்ந்தவனை தீவிரவாதிகள் ஐதராபாத்துக்கு அனுப்பி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குண்டு வெடிப்பை நிகழ்த்த மேலும் 2 அல்லது 3 பேர் உதவிகள் செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். எனவே குண்டு வெடிப்பில் 5 அல்லது 6 பேருக்கே தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர்கள் யாராக இருக்கும் என்று தேசிய புலனாய்வு பிரிவினர் அடையாளம் காணத்தொடங்கி உள்ளனர். அவர்களது கணிப்புப்படி ஐதராபாத்தில் தில்சுக்நகர் பகுதியில் தீவிரவாதிகள் இந்த வார தொடக்கத்தில் 2 தடவை ஒத்திகை பார்த்து இருப்பதாக தெரிகிறது.
இந்த ஒத்திகையை முன் நின்று நடத்தியவன் படத்தை ராஜு என்று பெயரிட்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இவன் 10 நாட்களாக தில்சுக்நகரில் நடமாடி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவனது உண்மையான பெயர் மற்றும் விவரங்களை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர்.
இதற்கிடையே தில்சுக் நகரில் சைக்கிளில் குண்டுகளை எடுத்து வந்து வைத்த தீவிரவாதிகள் இருவரும் தமரேஜ், விகார் அலியாஸ் அகமது என்று தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் இவர்களை அழைத்து வந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகிக்கிறது.
மேலும் மும்பையில் கடந்த 2011-ம் ஆண்டும், ஐதராபாத்தில் 2007-ம் ஆண்டும் குண்டு வெடிப்பை நடத்திய தீவிரவாதிகளே, தில்சுக்நகரில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தீவிரவாதிகளின் படங்களை மராட்டிய மாநில போலீசார் ஆந்திரா போலீசாருக்கு கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தீவிரவாதிகள் தில்சுக்நகரில் உள்ள சாய்பாபா கோவிலை தகர்க்கவே திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அங்கு குண்டு வெடிப்புக்கு திட்டமிட்டிருந்த சமயத்தில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கோவிலுக்கு வந்து விட்டதால் தீவிரவாதிகள் கடைசி நிமிடத்தில் தங்கள் சதி திட்டத்தை மாற்றியதாக தெரிகிறது.
மேலும் இந்த தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் வகுக்கப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தங்கள் கை வரிசையை எப்போது வேண்டுமானாலும் காட்ட முடியும் என்ற நிலையில் இருப்பதை மீண்டும் உறுதி படுத்தியுள்ளனர். ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனாலும் இந்த சதி திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த ஒருவனை தேசிய புலனாய்வு பிரிவினர் பிடித்துள்ளனர். அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
அவன் யார், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்பது உள்பட எந்த தகவலையும் வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். இதற்கிடையே 2007-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் சிக்கி கால் இழந்த அப்துல்வாகீத் என்பவன் மீண்டும் இந்த தடவையும் 2-வது தடவையாக குண்டு வெடிப்பில் சிக்கி காயம் அடைந்துள்ளான். அவன் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. போலீசார் பிடியில் உள்ள இந்த 2 பேர் மூலம் துப்பு துலங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment