Wednesday, February 13, 2013

யாழ். மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த கஷ்டங்களையும் இழப்புகளையும் நான் நன்கு அறிவேன். இப்போது அந்த நிலை மாற்றம் பெற்றுள்ளது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, February 13, 2013
இலங்கை::வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்த நிதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் தற்போது உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள தவறிய காரணத்தினால் அந்த நிதி திறைசேரிக்கு திரும்பிச் சென்றதாக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.


இவ்விதம் அரசாங்கம் வட பகுதியின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்த தவறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அரசாங்கம் வடபகுதியின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற தவறான குற்றச்சாட்டை அரசின் மீது சுமத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று யாழ். டில்கோசிட்டி ஹோட்டலில் நடைபெற்றது. அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்து தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து யாழ். மாவட்ட மக்களை சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

யாழ். மக்கள் கடந்த 30 வருடங்களாக அனுபவித்த கஷ்டங்களையும் இழப்புகளையும் நான் நன்கு அறிவேன். இப்போது அந்த நிலை மாற்றம் பெற்றுள்ளது. மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

நாட்டில் சகல இன, மத, பிரதேச மக்களும் ஒரே விதமாக சகல வசதிகளையும் பெற்று வாழ வேண்டும். அவற்றில் எதுவித வித்தியாசமும் இருக்க முடியாது. அதுவே எமது எதிர்பார்ப்பு.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி பேச நான் உங்கள் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இங்குள்ள அரச அதிகாரிகள் தமது பூரண ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும். அரசாங்கத்தின் சேவைகளை மக்களுக்கு முறையாக எடுத்துச் செல்வதில் முன்னின்று உழைப்பது அவசியம்.

மக்களுக்கு சேவை செய்யும் போது இன, மத, குல, பேதமின்றி அதனைச் செய்வதுடன் அரசாங்கத்தின் சேவைகளை மக்கள் அனுபவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என நான் கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று மக்கள் சேவை நாடி உங்களிடம் வரும்போது கருணையுடன் அவர்களை அணுகுங்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் வீடுதிரும்ப வழி செய்யுங்கள். அதுவே மிக முக்கியம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். மக்கள் மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி.

வடக்கின் வசந்தம் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்டில் ஒரு அரசாங்கமே உள்ளது என்பதை உணர்ந்து அதற்கிணங்கவே செயற்பட வேண்டும்.

நீங்கள் உண்மையாகச் செயற்பட்டால் எப்போதும் நான் உங்களைப் பாதுகாப்பேன்.

நான் எப்போதும் கூறுவதையே இன்று இங்கும் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் சேவை மகேசன் சேவை. இதை ஒரு போதும் மறக்க வேண்டாம். உங்கள் சிறந்த சேவை மூலம் மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வையுங்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்த நிகழ்வில் கடந்த பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இலங்கையில் மூன்றாமிடத்திலும் யாழ். மாவட்டத்தில் முதலாமிடத்திலும் கணிதப் பிரிவில் சிறப்புச் சித்தி பெற்றுள்ள பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கபிலனுக்கு ஜனாதிபதி அவர்கள் மடிகணனியொன்றைப் பரிசளித்து கெளரவித்தார்.

அத்துடன் தேசிய சேமிப்பு வங்கியின் நிதியுதவியும் அம்மாணவனுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, பஷில் ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, பவித்ரா வன்னியாராச்சி, திஸ்ஸ கரலியத்த உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அவர்களிடம் முறைப்பாடு செய்தனர்.

இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி, நீங்கள் உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிதி தேவை என்று கேட்கின்றபோதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயத்தில் அக்கறை காண்பிக்காமல் அரசியல் நடத்துவதினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டின் ஜனாதிபதி ஒருவர் தங்களை நாடி தங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்து இந்தளவுக்கு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டதோடு இதற்காக அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இங்கு ஜனாதிபதி மேலும் விளக்கமளிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு எவ்விதம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய அனுபவம் இல்லாதிருந்ததும் இந்த நிதி முழுமையாக அபிவிருத்திக்காக கடந்த காலத்தில் பயன்படுத்த முடியாமல் போனதற்கு இன்னுமொரு காரணம் என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் அபிவிருத்திக்கான நிதியை எவ்விதம் அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றிய பயிற்சிப் பாசறை அரசாங்க உயரதிகாரிகள் உடனடியாக ஒழுங்கு செய்யவேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி இடம்பெயர்ந்த மக்களின் பல்வேறு பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துரைத்ததை தொடர்ந்து ஜனாதிபதி அவற்றுக்கு சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு அங்கிருந்த அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் -’> நடைமுறை அமுலில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தென் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியான முறையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தாவிட்டால் அந்த நிதி வேறு அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment