Thursday, February 28, 2013

இலங்கையில் 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி சரியாகத் தெரியாது - அமெரிக்கா!

Thursday, February 28, 2013
இலங்கையில் 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றி சரியாகத் தெரியாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் பல நிறுவனங்கள் மதிப்பீடுகளை செய்த போதிலும், அமெரிக்கா எவ்வித கணக்கெடுப்பையும் நடத்தவில்லை யூ.எஸ். எயிட் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பிரதி நிர்வாகி டெனிஸ் ரோலின் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விபரத் தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வடக்கில் வாழ்ந்து வரும் பெண்கள் பாரியளவு பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ரோலின் தெரிவித்துள்ளார்.எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நாக்கி வருகின்றனர் என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் வெளிப்படையான ஆட்சி முறைமையின் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சகல விதமான குற்றச்சாட்டுக்களுக்கும் அரசாங்கம் பதில் சொல்ல வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பை காத்திரமாக்கும் நோக்கில் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment