Thursday, February 21, 2013
பூந்தமல்லி::சென்னையில் வீட்டில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள பிரேசில் நாட்டு கரன்சிகளை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பிடிபட்டவர்கள், இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர் சென்னை ராமாபுரம் அம்பாள் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெளிநாட்டு பணம் பதுக்கி வைத்திருப்பதாக, மத்திய அரசின் குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 10க்கும் அதிகமான போலீசார், அந்த வீட்டில் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பிரேசில் நாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் தங்கியிருந்த 5 பேரை பிடித்தனர். பிடிபட்டவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் கடந்த மாதம் 18ம் தேதி கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த அப்துல் முனாப் (20), வசீம் (24), அப்துல் இஸ்மாயில் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் கள்ள நோட்டுகள், கம்ப்யூட்டர், டேட்டா கார்டு, கிரெடிட் கார்டு இயந்திரம் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் சரணடைந்த கள்ளநோட்டு கும்பல் தலைவன் ரபீக்கை (34) போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த கும்பலுடன் தற்போது பிடிபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment