Monday, January 14, 2013
மதுரா::பாகிஸ்தான் ராணுவத்தால், தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட, இந்திய வீரர், ஹேம்ராஜ் சிங்கின் மனைவி மற்றும் தாயார், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர். "ஹேம்ராஜின் துண்டிக்கப்பட்ட தலையை, எங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்; அதுவரை, உண்ணாவிரதத்தை தொடருவோம்' என, அவர்கள் அறிவித்துள்ளனர்.
காஷ்மீரில், இந்திய எல்லை பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த, இந்திய வீரர்கள் மீது, பாகிஸ்தான் ராணுவத்தினர், கடந்த வாரம், தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில், ஹேம்ராஜ் என்ற வீரரின் தலையை துண்டித்த, பாக்., ராணுவத்தினர், அந்த தலையையும், தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர். ஹேம்ராஜ், உ.பி., மாநிலம், மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில், ஹேம்ராஜின் மனைவி தரம்வதி, தாயார் மீனா தேவி உள்ளிட்டோர், தங்கள் சொந்த கிராமத்தில், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:ஹேம்ராஜின் தலையை துண்டித்ததை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது, இரக்கமற்ற, கொடூர செயல். இதற்கு, பாக்., ராணுவம், பதில் அளிக்க வேண்டும். ஹேம்ராஜின் துண்டிக்கப்பட்ட தலை, எங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும். தலை கிடைக்கும் வரை, எங்களின் உண்ணாவிரதம் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஹேம்ராஜின் குடும்பத்திற்கு, 20 லட்சம் ரூபாய் நிதி அளிப்பதாகவும், ஹேம்ராஜ் பெயரில், மருத்துவக் கல்லூரி அமைப்பதாகவும், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், உறுதி அளித்துள்ளார்.
15 லட்சம் ரூபாய்:
ஹேம்ராஜுடன் கொல்லப்பட்ட, மற்றொரு இந்திய வீரர், சுதாகர் சிங், ம.பி., மாநிலம், சிதி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது வீட்டுக்கு, ம.பி., மாநில, பொதுப் பணித் துறை அமைச்சர், நகேந்திர சிங், நேற்று சென்றார். சுதாகரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அவர், 15 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

No comments:
Post a Comment