Monday, January 28, 2013
இலங்கை::இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சின் தெற்காசிய மற்றும் பசுபிக் விவகார பிரிவுகளுக்கு பொறுப்பான மூன்று பிரதிச் செயலாளர்கள் குழு, இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் மஹிந்த ஹத்துருசிங்கவை சந்தித்து கலந்துரையா
டியது.
மூவர் அடங்கிய இந்த விசேட பிரதிநிதிகள் குழுவில் அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பிரதி உதவிச் செயலாளர் ஜேன் ஜிம்மர்மன் ஆகியோர் உள்ளிட்ட 10 பேர் அடங்குகின்றனர்.
இதன்போது, யுத்தத்துக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். கட்டளைத் தளபதியினால் அமெரிக்க ராஜாங்க குழுவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
'இலங்கை இராணுவத்தின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் யாழ். மக்கள் நன்கறிவர். போருக்கு பின்னர் அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் விரிவாக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்' என்று யாழ். கட்டளைத் தளபதி விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், மனிதாபிமான உதவிகள், பொதுநல நடவடிக்கைகள், முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட வடக்கில் இரர்ணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது என்று யாழ். படைத் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்து விளக்கமளித்த கட்டளைத் தளபதி கூறியதாவது,
'யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த படையினரின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் படிப்படையாக குறைக்கப்பட்டுள்ளது. இங்கு நிலைகொண்டுள்ள இராணுவம் ஒருபோதும் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. தெற்கில் போன்றே வடக்கிலும் அரச கட்டமைப்புக்கான பொறுப்புக்களில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தை மேலும் குறைக்க இராணுவ தலைமையகத்தின் ஆலொசனைக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு வருகின்ற நிலையில் இன்னமும் 3 சதவீத நிலப்பரப்பு மாத்திரமே கண்ணிவெடி அகற்றுவதற்காக எஞ்சியுள்ளது.
வடக்கில் சில பகுதிகளிலுள்ள காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் அக்காணிகளில் இன்னமும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை. அவ்வாறு வெளிநாடுகளில் வாழ்பவர்கள் நாடு திரும்பும் நோக்கத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது' என்றார்.
யாழ். கட்டளைத் தளபதியின் விளக்கத்தை கேட்டு முடித்த அமெரிக்க உயர்ஸ்தானிகர் மைக்கேல் ஜே. சிசன், 'போருக்கு பிந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை' என்று கூறினார்.



No comments:
Post a Comment