Thursday, December 13, 2012
இலங்கை::பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பாக நாம் எந்த இடத்திலும் அரசியல் கட்சி என்ற அடிப்படையில் செயற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசியல் யாப்பில் பாராளுமன்ற உறுப் பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்தக் குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருப்பதாகவும், அதன்படியே அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழில்சார் நிபுணர்களின் ஐந்தாவது மாநாடு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :-இக்குற்றப் பிரேரணை தொடர்பாக பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் இன்று நிலவுகின்றன. என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இது தொடர்பாகத் தெளிவுபடுத்த விரும்புகின் றேன்.
இன்று நாட்டில் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பே நடைமுறையில் உள்ளது. இந்த அரசியல் யாப்புக்கு முன்னர் சோல்பரி அரசியல் யாப்பே நடைமுறையில் இருந்தது. அந்த யாப்பில் நீதிபதி ஒருவர் குற்றம் செய்தால் அவரை பதவி நீக்கம் செய்யும் ஏற்பாடுகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.
உலகிலுள்ள எல்லா நாடுகளினதும் அரசியல் யாப்புகளில் நீதிபதியொருவர் குற்றம் இழைத்தால், அது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய முறைகள் அந்த யாப்புகளிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அரசியல் யாப்பின் பிரகாரம் நீதிபதி ஒருவருக்கு எதிராக குற் றப்பிரேரணை கொண்டு வரும் முறை 78ம் ஆண்டு அரசியல் யாப்பில் உள்ளடக் கப்பட்டுள்ளது. என்றாலும் அந்த யாப் பைத் தயாரித்தது யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவின் அரசியல் யாப்பே இது.
அவர் 1930 களில் அரசிய லில் பிரவேசித்து அரச பேரவை முதல் நேரடி அரசியலை ஆரம்பித்தவர். அவர் அரசியலில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவர். இவர் 78 ஆம் ஆண்டு அரசியல் யாப்பைத் தயாரிக்கும் போது, அவரது அரசாங்கத்தில் இன்று எமது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது போன்று சிறந்த சட்ட வல்லுனர்கள் அங்கம் வகித்தனர். குறிப்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் இருந்தனர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தன இந்த அரசியல் யாப்பைத் தயாரிக்கும் போது நாட்டின் பல்வேறு துறைகளதும் கவனம் ஈர்க்கப்பட்டு, அந்த அரசியல் யாப்பு அமைக்கப்பட்டது போன்றே, நாட்டின் யாதேனுமொரு நீதவான் தவறிழைக்கும் பட்சத்தில் அதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் அதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, குற்றப் பிரேரணை தொடர்பான ஏற்பாடுகளும் அவரது அனுபவத்தை வைத்தே அதில் சேர்த்துள்ளார்.
ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களின் அரசியல் அனுபவம், கொள்கை என்பவற்றிற்கு நான் விருப்பமான ஒருவன் அல்ல. எனினும் 78 ஆம் ஆண்டின் யாப்பு தொடர்பாக அவருக்குள்ள அனுபவம் தொடர்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் 1947 முதல் இருந்து வந்த சோல்பரி அரசியல் யாப்பு மற்றும் எமது 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு என்பவற்றிலே நீதவான்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே 1978 ஆம் ஆண்டின் யாப்பிலே தெளிவாகவே குற்றப் பிரேரணை தொடர்பாக ஜே. ஆர். ஜெயவர்தன அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். இதில் மாற்றமிருப்பின் அரசியல் யாப்பிலே காணப்படுகின்ற ஏற்பாடுகள் கொண்டுவரப்பட்ட காலத்திலேயே இது தொடர்பாக பேசப்பட்டிருக்க வேண்டும்.
இன்று கூறப்படுகின்ற வாத விவாதங்களை நோக்கும் போது மக்கள் ஆணை என்பது நிறைவேற்று அதிகாரத்திற்கா பாராளுமன்றத்திற்கா அல்லது நீதிமன்றத்திற்கா என்பது பற்றி பேசப்பட்டு வருகின்றது. ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கும் சட்டத்தரணிகள், சில பெரியார்கள், அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் என்பன ஏன் இதுபற்றி முன்னர் கருத்துத் தெரிவிக்கவில்லை என கேட்க விரும்புகிறேன்.
எனவே இவ்வாறான நிலையில் 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்ட தினத்திலிருந்து தற்போது பிரதம நீதியரசருக்கு குற்றப் பிரேரணையொன்று முன்வைக்கப்படும் வரையில் அதுபற்றி பேசாது மெளனமாக இருந்துவிட்டு, இன்று அதுபற்றி பேசுவதற்கு முன்வந்துள்ளமை பற்றி எமக்கு பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான ஒரு நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள இந்த விளக்கமளித்தல் நிகழ்வானது பாராட்டத்தக்கதாகும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment