Tuesday, December 11, 2012

கொச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Tuesday, December 11, 2012
திருவனந்தபுரம்::கொச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நெடும்பாசேரியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்று காலை 6.45 மணியளவில் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்திற்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கொச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்று மாலைக்குள் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து பரபரப்பு அடைந்த அதிகாரிகள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசாரும், விமான நிலைய பாதுகாப்பு படையினரும் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு பிரிவு போலீசாரும் சோதனை நடத்தினர். பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சோதனையில் இதுவரை வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடக்கிறது. இதற்கிடையேகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு செல்போன் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment