Friday, December 14, 2012

இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும் புலிகள் தனிநாடு கேட்டு போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம் - கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னா!

Friday, December 14, 2012
இலங்கை::இலங்கையில் யுத்தம் நடைபெறுவதற்கும்  புலிகள் தனிநாடு கேட்டு போராட்டத்தை நடத்தவும் அன்றைய இனவாதிகளே காரணம்' என்று கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னா தெரிவித்துள்ளார்.

இன்று யாழில் நடைபெற்ற புதிய ஐஸ் தொழிற்சாலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திற்குப் பின்னர் அன்றிருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பெடரல் முறை வேண்டாம் என்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்பட விரும்பவதாக தெரிவித்திருந்தனர்.

1958ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டபோது ஒரு நாட்டுக்குள் இரண்டு மொழிகள் வேண்டும் என்று கோசமிட்டனர். இந்த கோசம் 20 வருடங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் தோற்றம் பெறுவதற்கும் அவர்கள் தனிநாடு கேட்டு போராடுவதற்கும் வழிவகுத்தது.

இந்த போராட்டத்தின் விளைவாக 30 வருடகாலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சிங்கள, தமிழ் இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அவ்வாறு கோசங்களிட்ட இனவாதிகளில் 75 வீதமானவர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள். இன்னும் 25 வீதமானவர்கள் மட்டுமே தென்னிலங்கையில் இருக்கின்றார்கள்.

ஒரு நாணயத்தில் இருக்கின்ற இரண்டு பக்கங்களைப் போன்றது தான் இன்றுள்ள தமிழ், சிங்கள இனவாதம்.இந்த இனவாதப் போக்கை இனிவரும் காலங்களில் எமது எதிர்காலப் பரம்பரைக்கு நாங்கள் கொண்டு செல்ல விடமாட்டோம்.

வட மாகாணம் எம்மோடு என்றும் கூடவே இருக்கும் ஒரு மாகாணமாகும். டீ.எஸ்.சேனநாயக்க முதல் சந்திரிகா குமாரதுங்க வரை செலவழிக்காத பணத்தைச் செலவழித்து வடக்கில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்திருக்கின்றது.

இனி ஒரு பயங்கரவாதம் உருவாவதை தடுக்க எம்மால் முடியும். அவ்வாறு உருவாகினால் தடுப்பதற்கு படையினரால் முடியும். அத்துடன் 2013ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment