Sunday, November 04, 2012
புதுடெல்லி::டெல்லி காங்கிரஸ் பேரணியில் பங்கேற்க தொண்டர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். மத்திய அரசு மீதும், மத்திய மந்திரிகள் மீதும் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. சமூக சேவகர்கள் அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவாலும் மத்திய அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய அரசு பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனு மதிக்கும் பல முக்கிய முடிவுகளை எடுத்தது. இதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
சில கூட்டணி கட்சிகளும் எதிர்த்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக பாராளு மன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவும் திரிணாமுல் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மத்திய அரசு மீதும், காங்கிரஸ் மீதும் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்கள் கூறி வருவதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அன்னிய நேரடி முதலீடு திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறவும் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த பேரணி காங்கிரசின் பலத்தை நிரூபிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று காலை முதலே டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பக்கத்து மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் ராம்லீலா மைதானத்தில் குவியத் தொடங்கினர். அவர்கள் கையில் சோனியா, ராகுல், மன்மோகன்சிங் ஆகியோர் படங்கள் அடங்கிய அட்டைகளையும், பேனர்களையும் பிடித்தவாறு ராம்லீலா மைதானம் நோக்கி சென்றவாறு இருந்தனர். நேரம் செல்லச்செல்ல தொண்டர்கள் கூட்டம் அதிகரித்தவாறு இருந்தது.
இன்று மதியம் வரை லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடினர். பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மன்மோகன்சிங் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நேரடி அன்னிய முதலீடு அனுமதியால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார். இதனால் விலைவாசி உயர்வு எப்படி கட்டுப்படுத்தப்படும் என்பதையும் விளக்குகிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகள் சுமத்தும் ஊழல் புகார்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகிறார். காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ராகுல்காந்தி பேசுகிறார்.
சமீபகாலமாக ராகுல்காந்திக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் தான் அவர் மந்திரிசபையில் சேர்க்கப்படாமல் கட்சி பொறுப்புகளை கவனிக்க முடிவு செய்துள்ளார். அவருக்கு கட்சியில் சோனியாவுக்கு அடுத்தபடியாக 2-வது இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய பேரணியில் சோனியா, மன்மோகன் சிங்குடன் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதன் மூலம் ராகுல்காந்திக்கு கட்சியில் 2-வது இடம் அளித்து இருப்பதை காட்டுவதாக உள்ளது.
இந்த பேரணியில் மூத்த மத்திய மந்திரிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்களும் கலந்து கொள்கிறார்கள். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் காங்கிரசின் பலத்தை எடுத்துக்காட்டுவதாக இந்தப் பேரணி இருக்கும் என்றும் பேரணியில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment