Sunday, November 04, 2012
இலங்கை::தமிழ் மக்களின் பிரச்சினைகள் சுமூகமாகவும் ஜக்கியமாகவும் தீர்த்துகொள்வதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் நாம் பெரும்பான்மையின மக்களின் மனங்களை வெல்லும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சோரன்பற்று கிராமத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் அமைக்கப்பட்ட முன்பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இனங்களுக்கிடையே நல்லிணக்கம் என்பது மிக அவசியமானது அவ்வாறே ஜக்கியமும், கருத்துபரிமாற்றமும் ஏற்படுவதன் ஊடாக நீண்ட காலமாக இந்த நாட்டில் இரு இனங்களுக்கிடையே நிலவிவருகின்ற பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்ள முடியும் அந்த வகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்ற செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது குறிப்பாக இன்று தென்னிலங்கையிலிருந்து வருகை தந்துள்ள பெரும்பானடமையின சகோதரர்கள் இங்குள்ள மக்களோடு பரஸ்பரம் கருத்து பரிமாற்றங்களில் ஈடுபடுவதன் ஊடாக இரு இனங்களுக்கிடையே சுமூகமாக நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளன.
மேலும் இவ்வாறான வாய்ப்புக்களை அபிவிருத்தியின் ஊடாகவுமே மேற்கொள்ள முடியும் அபிவிருத்தி என்பது எங்கள் மக்களுடைய வாழ்வில் முக்கியமானது முன்னேற்றம் இல்லையென்றால் நாம் வாழ்வில் மீள முடியாது எமக்கான ஒரு வளமான வாழ்வு அவசியமானது ஆனால் சிலர் எமது மக்களின் வளமான வாழ்வை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றனர் இது தமிழ் மக்களை நிம்மதியான வாழ்வுக்கு இட்டுச்செல்லாது எனவும் தெரிவித்த அவர் முன்பள்ளி சிறார்களே சமூகத்தின் வருங்கால சொத்துக்கள் அவர்களை இன்றிலிருந்தே நல்ல அறிவார்ந்த சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டும் அது எம் அனைவரினதும் பொறுப்பு எனவும் குறிப்பிட்டார்.
கிராம அபிவிருத்தி அமைப்பின் செயலாளர் இராசதுரை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் அன்பழகன்,மீள் எழுச்சிதிட்டம் மற்றும் வடக்கின் துரித மீட்சித்திட்டம் ஆகியவற்றின் பிரதித்திட்டப்பணிப்பாளர் விஜயகிருஸ்னண், மொனராகலை மாவட்ட கெமிதிரிய திட்டத்தின் பிரதிதிட்டப்பணிப்பாளர் சமன்; ,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் கிராம அலுவலர் நிமலகாந்தன், பளை பிரதேச சபை செயலாளர் சிவபிரகாசம்,மொனராகலை மாவட்ட கெமிதிரிய திட்டத்தின் வளவாளர்கள் பிரதேச பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்


No comments:
Post a Comment