Thursday, September 27, 2012
பொகாரோ(ஜார்க்கண்ட்)கோஷ்டிப் பூசலைக் கைவிட்டு கட்சியை வளர்க்கப் பாடுபடுங்கள் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சியின் பொதுச் செயலர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கோஷ்டி அரசியல் நடத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் இக்கருத்தை வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதன்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல், அங்கு கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களையும் சந்தித்துப் பேசினார். கட்சியினர் மத்தியில்பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வளராததற்கு கோஷ்டி அரசியல்தான் காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
மாநில காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் இல்லாதிருந்தால் குறைந்தபட்சம் 25 முதல் 30 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்திருக்க வேண்டும் என சுட்டிக் காட்டியதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சஹாய், மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர பிரசாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார்.
அப்போதுதான் இப்போது ஆட்சியில் உள்ள அரசை அகற்றுவதற்கு மக்கள் மனதளவில் தயாராவார்கள் என்றும் சுட்டிக் காட்டியதாகத் தெரிகிறது. அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை கட்சியினர் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் துணிச்சலோடு செயல்பட வேண்டும் என்றும் அத்தகைய நடவடிக்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பஞ்சாபில் சுற்றுப் பயணம்: ராகுல் காந்தி அக்டோபர் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அமிருதசரஸ், ஜலந்தர், பாட்டியாலா ஆகிய பகுதிகளுக்குச் செல்ல உள்ள அவர், அப்பகுதியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். கட்சியினரைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்களை சந்தித்துப் பேச உள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார். அக்டோபர் மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் பஞ்சாபில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு அம்மாநிலத்துக்கு ராகுல் இப்போதுதான் முதல் முறையாகச் செல்ல உள்ளார்.

No comments:
Post a Comment