Sunday, September 30, 2012

தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.2,262 கோடி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு!

Sunday, September 30, 2012
சென்னை::தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலை உள்கட்டமைப்பு பணிகளுக்காக 2,262 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் 248 கி.மீ. நீள இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகளை இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணிகள், 895 கி.மீ நீள சாலைகளின் கட்டமைப்பின் தரம் மற்றும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகள், நில ஆர்ஜித பணிகள், 27 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் புதுப்பிக்கும் பணிகள் என 397 பணிகளுக்காக ரூ.903.80 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த பணிகளில் சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளை உலக தரத்திற்கு உயர்த்திடும் பணிகளும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், கோயம்பேட்டில் உள்ள மேம்பாலம், கத்திப்பாராவில் உள்ள மேம்பாலம், ஆகியவைகளில் பசுமைநிற பூங்காக்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகளும், அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள சுரங்கப்பாதை, சாந்தி திரை அரங்கம் அருகில் உள்ள சுரங்கப்பாதை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ஆகியவைகளை அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment