Wednesday, August 29, 2012

சர்வதேச வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது - ரஊப் ஹக்கீம்!

Wednesday, August 29, 2012
இலங்கை::தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலே அரசியல் ரீதியான இணக்கப்பாடு என்பது எட்டப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் நிரந்தரமானதொரு தீர்வு சாத்தியமாகும்.

சர்வதேசம் அனைத்தினையும் வென்று தந்துவிடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது.

மு.காங்கிரஸ் சர்வதேசத்தினையும் நம்பவில்லை. இங்குள்ள ஆட்சியாளர்களையும் நம்பவில்லை. எங்களுடைய மக்களையே நாம் நம்புகின்றோம்' என்று மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் எஸ்.எல்.பளீல் ஆகியோரை ஆதரித்து அட்டாளைச்சேனை கோணாவத்தை சிறிய பாலத்துக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மு.கா உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்ளூ

'சர்வதேசத்துக்குக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலே அரசாங்கமானது - ஆணவத்தோடும், இறுமாப்போடும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு தீர்மானித்தது. ஆனால், அரசாங்கம் ஆரம்பித்த இந்த நாடகம் இன்று தலைகீழாக மாறுகிறதொரு நிலை உருவாகியுள்ளது.

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்ற காரணத்தினால், தமிழ் பிரதேசங்களில் இலகுவாக தேர்தல் மோசடிகளைச் செய்ய முடிந்தது. அதனால்தான், கடந்த தேர்தலில் அமைச்சர் அதாஉல்லாவாலும் அவரின் அணிசார்பில் மூன்று வேட்பாளர்களைக் களமிறக்கி வெற்றிபெற முடிந்தது.

மரச்சின்னத்துக்கு அம்பாறைத் தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும் நிலைவரமொன்று உள்ளதாக - அரசாங்கத்துக்கு அதனுடைய உளவுப் பிரிவு ஏற்கனவே அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்திருக்கின்றது.

கடந்த கிழக்குத் தேர்தலில் நிலவிய அசாதாரணமான சூழல் இந்தத் தேர்தலில் இருக்கப்போவதில்லை. காரணம் தேர்தல் ஆணையாளர் இறுக்கமான உத்தரவுகளை பிறப்பிக்கின்றார். உதாரணமாக, அக்கரைப்பற்றில் கடந்த இப்தார் நிகழ்வுகளின் போது தொந்தரவுகளைத் தந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி - தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று தற்போது பொலிஸ் மா அதிபரால் கட்டளையிடப்பட்டுள்ளது. அதனால், அம்பாறை கரையோரப் பிரதேசத்துக்கு என்று தனியானதொரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு 18ஆவது சட்டத் திருத்தம் என்கிறதொரு மிகப்பெரும் கைங்கரியத்துக்கு மு.கா. துணை போயிருக்கிறது. அது சாமானியமான விடயமல்ல. 18ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலமாக - ஒரு சரித்திரப் பழியினை எங்கள் தோள்களிலே சுமக்கின்றோம். இதை அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும். காலங்காலமான மிகப்பெரும் பழியாக இந்த விடயம் மு.காங்கிரஸ் மீது இருந்துவரப் போகிறது. ஆனாலும், மு.காங்கிரஸைப் பாதுகாப்பதற்காகவும், இந்தக் கட்சி அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் அதை நான் செய்தோம்.

நான் சொன்னாலும் சொல்லா விட்டாலும், 'அவர்கள்' விரும்பினாலும் விரும்பாது விட்டாலும், மு.கா. தலைவரின் அமைச்சுப் பதவியினைப் பணயம் வைத்துக் களமிறங்கியுள்ளதொரு தேர்தலாகத்தான் இது இருக்கின்றது.

சர்வதேசம் அனைத்தினையும் வென்று தந்து விடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக் கொண்டிருக்கின்றது. மு.காங்கிரஸ் சர்வதேசத்தினையும் நம்பவில்லை. இங்குள்ள ஆட்சியாளர்களையும் நம்பவில்லை. எங்களுடைய மக்களையே நாம் நம்புகின்றோம்.

சர்வதேச சமூகம் தன்னுடைய தேவைக்கு தமிழ்த் தேசியத்தைப் பாவிப்பதற்கு முயற்சிக்கின்றது. வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது. ஆனால், மு.காங்கிரஸ் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கிறது.

தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலே அரசியல் ரீதியான இணக்கப்பாடு என்பது எட்டப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் நிரந்தரமானதொரு தீர்வு சாத்தியமாகும். ஆனால் அது நடக்கக் கூடாது என்று பேரினவாதம் நினைக்கலாம்' என்றார்.

இந்தக் கூட்டத்தில், மு.கா.வின் ஸ்தாபகச் செயலாளரும், அட்டாளைச்சேனை தேர்தல் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், மு.கா.வின் சிரேஷ்ட பிரதித் தலைவர் முழக்கம் மஜீத், மு.கா.வின் அம்பாறை மாவட்ட பொருளாளர் ஏ.சி.யஹ்யாகான், மு.கா. வேட்பாளர்களான, கே.எம்.ஏ.ஜவாத், எம்.ஐ.எம்.மன்சூர், நஸார் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment