Saturday, August 25, 2012சென்னை::திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூரில் நடந்த டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: டெசோ மாநாடு குறித்து சிலர் ஏளனம் செய்துள்ளனர். நையாண்டி பேசியுள்ளனர். அதற்கு வருத்தப்பட மாட்டேன். 1956ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் அண்ணா முன்னிலையில் தமிழ் ஈழ உரிமை தீர்மானத்தை முன்மொழிந்தேன். அதே தீர்மானம்தான் இன்றைய நிலைக்கு ஏற்ப மாற்றி, நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மாநாட்டில் நானும், ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ், தோழர் பஸ்வான், வாஜ்பாய் அவர்களுடன், விடுதலை போராளிகளை கூட்டி வைத்து, ‘‘ஏன் மோதி கொள்கிறீர்கள். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறினேன். ‘‘யாரையும் கொல்ல மாட்டோம், போராட்ட குழுவினர் பல பெயர்களில் இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம் என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள். அவர்கள் சத்தியத்தை உறுதியாக கடைப்பிடித்து இருந்தால் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்.
ஒற்றுமை, வலிமை இருந்தால் நம்மை யாராலும் வென்றெடுக்க முடியாது. இது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, கழக தோழர்களுக்கும் சொல்கிறேன். அம்பத்தூரில் நடக்கும் இந்த கூட்டம் வெற்றிக் கூட்டமாக இருந்திருக்கும். அதை நாம் தவற விட்டுவிட்டதற்கு காரணம் கட்டுப்பாடு இன்றி ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு இவன் இருந்தால் நாம் தலைவனாக இருக்க முடியாது, அவனை ஒழித்தால்தான் நாம் தலைவனாக ஆக முடியும் என்று எண்ணியதால் ஏற்பட்ட விளைவுதான் இன்று தமிழ் ஈழத்தில் தவிக்கும் தமிழ் மக்கள், தாய்மார்கள், குழந்தை செல்வங்களை பார்த்து நாம் கண்ணீர் விட வேண்டியவர்களாக இருக்கிறோம். மத்தியில் உள்ள ஒரு அதிகாரி தமிழ் ஈழ மாநாட்டிற்கு நாம் ஆயத்தம் செய்கிறோம் என்பதை கேள்விப்பட்டு பிரதமருக்கு தெரியாமல், விஷயம் தெரிந்தவர்களுக்கு தெரியாமல், ஈழம் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது என்று அறிவித்தார். அந்த கடிதத்தை பார்த்ததும் எனக்கு அடங்காத கோபம். உடனே பாலுவை அழைத்து என்ன இது என்றேன். பாலு டெல்லியில் தொடர்பு கொண்டு பேசிய பின்னர்தான் ஈழ மாநாடு நடத்த ஆட்சேபனை இல்லை என்று மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
ஆனால் தமிழக அரசு இந்த மாநாடு நடத்துவதை ஏற்க முடியாது என்று போலீஸ் அதிகாரிகளை விட்டு தடை விதித்தது. அதிமுகவில் உள்ள ஒரு ஏமாளியைவிட்டு தடை வாங்கச் சொன்னார்கள். மூவேந்தர் ஆண்ட பரம்பரையில் வந்த நாம் நடத்தும் மாநாட்டை நடத்த அனுமதி கிடையாது என்று விவரம் புரியாத, இலக்கியம் படிக்காத போலீஸ் அதிகாரி கூறுகிறார். இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்ததற்கு முக்கியமான காரணம் இந்த மாநாட்டுக்கு தடை போட்ட ஜெயலலிதாதான். அவருக்கு நன்றி சொல்கிறேன். டெசோ மாநாட்டு தீர்மானங்களை 20 நாட்களில் ஐநா சபைக்கு அனுப்ப இருக்கிறோம். ஐநா சபை அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கருணாநிதிக்கு வீரவாள் பரிசு
ஆவடி: திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் டெசோ மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் அம்பத்தூரில் நேற்றிரவு நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் எஸ். சுதர்சனம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன் முன்னிலை வகித்தார். அம்பத்தூர் நகர செயலாளரும் சென்னை மாநகராட்சி 7வது மண்டல குழு தலைவருமான ஜோசப் சாமுவேல் வரவேற்றார். விழாவிற்கு வருகை தந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திருமங்கலம், பாடி, கொரட்டூர், மண்ணூர் பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை, தொலைபேசி இணைப்பகம், அம்பேத்கர் சிலை, அம்பத்தூர் பஸ்நிலையம், செங்குன்றம் சாலை உள்ளிட்ட இடங்களில் தாரை, தப்பட்டை, அதிர்வேட்டுகள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் சிறப்பான வரவேற்பை மாவட்ட, நகர, வட்ட நிர்வாகிகள் வழங்கினர். திருமங்கலம் முதல் அம்பத்தூர் வரை வழிநெடுக கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள், கொடி தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கட்சியினர், பொதுமக்கள் சிடிஎச் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று உற்சாகமாக வரவேற்றனர். கருணாநிதிக்கு, மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம், நகர செயலாளர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் வீரவாள் பரிசளித்தனர். நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், துரைசாமி, மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், எம்பிக்கள் டிஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கா.சுந்தரம், கே.பி.பி. சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் இ.ஏ.பி. சிவாஜி, கும்மிடிப்பூண்டி வேணு, மாவட்ட நிர்வாகிகள் என்.எம். துரைசாமி, கே.நீலகண்டன், தி.வ.விஸ்வநாதன், திருத்தணி கோயில் முன்னாள் அறங்காவல் குழு தலைவர் மு.ஈஸ்வரப்பன், வி.ஜி.ராஜேந்திரன், பகலவன், ஆவடி நகராட்சி தலைவர் சா.மு.நாசர், நிர்வாகிகள் பாஸ்கர் சுந்தரம், பூண்டி பாஸ்கரன், தி.வை.ரவி, புழல் திருநாவுக்கரசு, நாராயணன், நடுகுத்தகை ராஜ், பூவை ஜெயக்குமார், மணலி துரை, கூளூர் ராஜேந்திரன், அம்பத்தூர் நகர நிர்வாகிகள் ஆ.இரா.நாதன், கன்னியப்பன், கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன், உதயசூரியன், மாலா சித்தார்த்தன், பி.கே. மூர்த்தி, சூ. ரவி, எம்.இ. சேகர், ராஜகோபால், இளங்கோ, மற்றும் மாவட்ட பிரதிநிதி துரை வீரமணி, ஒன்றிய கவுன்சிலர் எம்.எம். மூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் பா.மதி, கே.குப்புசாமி மற்றும் வினோத், ப.ச.கமலேஷ், நெய்வேலி ஊராட்சி தலைவர் டி.கிறிஸ்டி என்ற அன்பரசு, மோதிலால், பி.கே. நாகராஜ், டி.வி. முருகன், ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment