Friday, August 24, 2012

கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை - விக்கிலீக்ஸ்!

Friday, August 24, 2012
இலங்கை::கருணா எவ்வாறு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பதனை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் திகதி இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புலிகள் அமைப்பிலிருந்து பிளவடைந்த கருணா அம்மானை, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கொழும்பிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஏப்ரல் மாத ஆரம்ப காலப்பகுதியில் இவ்வாறு கருணாவை, அலிசாஹிர் மொளலான அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருணாவை அழைத்துச் செல்லவில்லை முதலில் அலிசாஹிர் மௌலானா தெரிவித்த போதிலும் பின்னர் தாம் அழைத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டார்.

ஜூன் மாதம் 23ம் திகதி பத்திரிகைகளின் ஊடாகவே கருணா கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பில் அறிந்து கொண்டதாக ரணில் குறிப்பிட்டார்.

2004ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளினால், அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருணாவை கொழும்பிற்கு அழைத்துச் சென்ற அலி சாஹிர் மௌலானாவிற்கு அமெரிக்க வீசா வழங்குமாறு, ரணில் விக்ரமசிங்க அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டாடிடம் கோரியிருந்தார்.

மௌலானா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாரியளவில் அச்சுறுத்தல் நிலவி வருவதாக ரணில் குறிப்பிட்டார்.

புலிகள் தாக்குதல் நடத்தக் கூடுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலிசாஹிர் மௌhலான தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சவூதி அரேபியாவிற்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

அமெரிக்காவில் சென்று தங்கியிருப்பது குறித்தும் அவர் கவனம் செலுத்தியிருந்தார்.

மௌலானாவிற்கு வீசா வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு ரணில், அமெரிக்கத் தூதுவரிடம் கோரியிருந்தார்.

கருணா விவகாரம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய கருத்து முரண்பாடு ஏற்பட்டது, பிரதித் தலைவர் கரு ஜயசூரியவை தலைமைப் பதவிக்கு அமர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறெனினும், மௌலானா கருணாவை கொழும்பிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றே ரணில் தெரிவித்தார்.

அலிசாஹிர் மௌhலானாவிற்கு வீசா வழங்குவதில் எவ்வித தடைகளும் கிடையாது என அமெரிக்கத் தூதரகம் அறிவித்திருந்தது என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment