Friday, August 24, 2012

கொடுத்த அனுமதி ரத்து மதிமுக கூட்டத்துக்கு போலீசார் திடீர் தடை: திருப்போரூரில் பரபரப்பு!

Friday, August 24, 2012
திருப்போரூர்::மத்திய அரசின் தொல்லியல் துறையை கண்டித்து திருப்போரூரில் இன்று மதிமுக நடத்தவிருந்த பொதுக் கூட்டத்துக்கு போலீசார் திடீரென தடை விதித்துள்ளனர். தொல்லியல் துறையின் தடை சட்டம் 2010ஐ ரத்து செய்ய கோரி, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய மதிமுக சார்பில், இன்று மாலை திருப்போரூர் வேம்படி விநாயகர் கோயில் அருகே பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு போலீசாரின் அனுமதி பெற்றனர். இதையடுத்து, கடந்த 3 நாட்களாக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு திருப்போரூர் போலீஸ் எஸ்ஐ பன்னீர்செல்வம், ஏட்டு கேசவன் ஆகியோர் சென்றனர். ‘கூட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. வேறு இடத்தில் கூட்டம் நடத்துங்கள். உடனடியாக பந்தலை பிரிக்க வேண்டும் என்று மதிமுக ஒன்றிய செயலாளர் சிவராமனிடம் கடிதம் கொடுத்தனர். கடிதத்தை வாங்க அவர் மறுத்துவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பந்தலை பிரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சி.சத்யா, மாவட்ட செயலாளர்கள் பாலவாக்கம் க.சோமு, வேளச்சேரி மணிமாறன், ஜீவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மதிமுக தொண்டர்களும் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், ‘கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கூட்டம் நடத்த கோயில் நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும் என்றனர். ஆனால், சில மாதத்துக்கு முன்பு இந்த கோயில் இடத்தில்தான் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. உள்ளூர் அதிமுகவினர் தூண்டுதல் பேரில் பொதுக் கூட்டம் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர். திட்டமிட்ட இடத்தில் பொதுக் கூட்டம் நடக்கும் என மல்லை சத்யா கூறினார்.

No comments:

Post a Comment