Saturday, August 18, 2012ஜோகன்னஸ்பர்க் :சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய சுரங்க தொழிலாளர்கள் மீது போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 36 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் ரஸ்டன்பர்க் அருகே உள்ளது மரிகானா. இங்கு விலை உயர்ந்த பிளாட்டினம் சுரங்கம் உள்ளது. உலகிலேயே இந்த சுரங்கம் மிக பெரியது. இது லண்டனை சேர்ந்த லோன்மின் நிறுவனத்துக்கு சொந்தமானது. சுரங்கத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடினமான வேலை இருந்தும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.4000தான். அத்துடன் சுரங்கத்தில் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளருக்கு சரியான இழப்பீடும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 3 மடங்கு சம்பள உயர்வு கேட்டு கடந்த 10ம் தேதி முதல் தொழிலாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை வேலைக்கு திரும்பும்படி தொழிற்சங்கத்தினர் கூறினர். அப்போதுதான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூறினர். இதை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. கடந்த புதன்கிழமை போராட்டம் முற்றியது. பயங்கர ஆயுதங்களுடன் சுரங்க பகுதியில் 3,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தடியடி நடத்தினர். எனினும் தொழிலாளர்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 36 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொழிலாளர் கும்பலை கலைக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். எனினும் போலீசார் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று அதிகாரிகள் கூறினர். எனினும், Ôஇது மிகப்பெரிய கொடூரம்Õ என்று பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சுரங்க தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள தகவல் அறிந்து, மொசம்பிக் சுற்றுப்பயணத்தில் இருந்த தென் ஆப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அவசரமாக நாடு திரும்பி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறுகையில், Ôநிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்றார். லோன்மின் பிளாட்டினம் சுரங்க தலைவர் ரோஜர் பிலிமோர் கூறுகையில், போலீஸ் நடவடிக்கை மிகவும் மோசமானது. தொழிற் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.
No comments:
Post a Comment