Thursday, July 26, 2012

அசாம் கலவரத்தின் பின்னணியில் வங்கதேசம்? மத்திய அரசு விளக்கம்!

Thursday, July 26, 2012
புதுடெல்லி::அசாம் மாநிலம் போடோ பிராந்திய மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாக நீடித்து வரும் கலவரத்தின் பின்னணியில் வங்கதேச தூண்டுதல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய மாவட்டங்களான கோக்ரஜா, சிராங், துப்ரி, போங்கைகான், உதல்குரி ஆகியவற்றில் கடந்த 6 நாட்களாக போடோ இனத்தவருக்கும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு வருகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரை அனுப்பி வைத்துள்ளது. போலீஸ் படையும் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், தொலைதூர பகுதிகளில் இரவு நேரங்களில் மோதல் நீடித்து வருகிறது. மைனாரிட்டியாக இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அரசு அமைத்துள்ள நிவாரண முகாம்களில் அடைக்கலம் தேடி வருகின்றனர். இதுவரை 42 பேர் கலவரத்துக்கு பலியாகியுள்ளனர்.

2 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக மொத்தம் 71ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் ரயில் நிலையங்களில் முடங்கி கிடக்கின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் கவுகாத்திக்கு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய போலீஸ் படையைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த 6 நாட்களாக பரவி வரும் கலவரத்துக்கு வங்கதேசம் தூண்டுதல் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. கலவரத்தை தூண்டும் லோக்கல் தலைவர்களை கைது செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment