Friday, June 22, 2012

இலங்கை வங்கி அம்பாறை முகாமையாளர் அப்துல்லாஹ் அகற்றப்பட்டு மீண்டும் சிங்களவர் நியமனம்; ஹஸன் அலி கண்டனம்!

Friday, June, 22, 2012
இலங்கை::இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட முகாமையாளராக முதன்முறையாக கடந்த ஜனவரி மாதம் தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.எம்.அப்துல்லாஹ் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் நான்கு மாத இடைவெளிக்குள் அவரை அங்கிருந்து அகற்றிவிட்டு மீண்டும் ஒரு பெரும்பான்மை சமூகத்தவர் நியமிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து பிரதி நிதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தனவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ.ஹஸன் அலி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:

இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட முகாமையாளராக இதுவரை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். எனினும் அப்துல்லாஹ் அவர்கள் முறையாக பதவி உயர்வு பெற்ற பின்னர் முதன் முறையாக அப்பாறை மாவட்டத்தின் பிராந்திய முகாமையாளராக வந்ததனையிட்டு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் திருப்தி கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அவர் வேறு இடததுக்கு மாற்றப்பட்தையிட்டு தமிழ் பேசும் மக்கள் என்னிடம் அதிருப்தி தெரிவித்ததுடன் உங்களது உடனடி கவனத்துக்குக் கொண்டுவருமாறும் முறையிட்டுள்ள்னர்.

இவ்விடயம் பற்றி இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகள் பலரிடம் நான் தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் எனக்கு அளித்த பதில்கள் திருப்தியளிக்கக் கூடியதாக இல்லை. அதனால் இவ்விடயத்தை உங்களது நேரடி கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன்.

ஜனாப் அப்துல்லாஹ் அவர்கள் ஓய்வு பெறும் தறுவாயில் இம்மாற்றம் நடந்துள்ளதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். வழக்கமாக ஓய்வு பெறும் ஒரு அதிகாரியை அவரது சொந்த மாவட்டத்தில் தப்பித்தவறி சிறுபான்மை சமூகத்தினர் யாராவது உரிய தகைமையுடன் உயர் பதவிக்கு வந்தால் அவர்கள் மாற்றப்படுவதும் அல்லது அதிகாரமற்ற நிலமைக்குத் தள்ளப்படுவதும் மாமூலான விடயமாகும். இதனைத் தட்டிக் கேட்பதற்கு யாரும் முன்வருவதும் இல்லை.

இலங்கை வங்கியைப் பொறுத்தவரை அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை சமூகங்கள் வதியும் பகுதிகளில் 13 கிளைகளும் பெரும்பான்மையினர் வாழும் பகுதிகளில் 4கிளைகளுமே இயங்குகின்றன. இது தவிர பதியத்தலாவையிலுள்ள கிளை நிர்வாக ரீதியாக ஊவா மாகாணணத்துடனும் தெஹிஅத்தக் கண்டியிலுள்ள கிளை பொலநறுவை மாவட்டத்துடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வங்கிக்கு அதன் வருமானத்தையும் பணப்புழக்கத்தையும் தரும் கிளைகள் சிறுபான்மை சமூகங்கள் வதியும் பிரதேசங்களில் தான் உள்ளன. அப்படியிருந்தும் மாவட்ட நிர்வாகத்திலுள்ள உயர் பதவியில் இதுவரை எந்த ஒரு தமிழ் பேசும் நபரும் அமர்த்தப்படவில்லை என்பது விசனத்துக்குரியதாகும்.

இவ்வாறான நியாயமான விடயங்களை வெளிப்படையாகக் கேள்விக்குட்படுத்துபவர்கள் இனவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படுவதனால் எவரும் துணிந்து இவ்வாறான விடயங்களை சொல்வதற்கு தயங்குவது ஒரு துரதிஷ்டமான நிலையாகும்.

ஓய்வு பெறும் தறுவாயில் உள்ள ஒருவரை அவரது சொந்த இடத்தில் சேவையாற்ற அனுமதிப்பது பொதுவான ஒரு மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது நம் நாட்டில் உள்ள ஒரு சாதாரண விதியாகும். ஆனால் இந்த விடயத்தில் இவர் ஒரு தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர் என்பதற்காக இந்த மரபு மீறப்பட்டுள்ளதா என்பது தெளிவில்லை.

இவ்விடயத்தை நான் தங்களது கவனத்துக்குக் கொண்டு வருவது ஒரு இனவாத நோக்கில் அல்ல. முறையாக பதவி உயர்வு பெற்று தனது பதவியின் அந்திம காலத்தில் சொந்த மாவட்டத்தில் உரிய பதவியில் அமர்த்தப்பட்ட ஒரேயொரு சிறுபான்மை தமிழ் பேசும் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் அப்பதவியில் தொடரக் கூடாது என்பதற்கான நியாயம் என்ன என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகின்றேன்.

எனவே தயவு கூர்ந்து ஜனாப் அப்துல்லாவின் உரிமையை மீண்டும் நிலை நிறுத்தி அவரை எமது மாவட்டத்தில் கடமையாற்ற உதவுங்கள்” என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

இவ்விடயம் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி மெட்ரோ மிரருக்குத் தெரிவித்ததாவது;

“தமிழ் பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் அநேகமான அரச நிர்வாகங்கள் வலுக் கட்டாயமாக பெரும்பான்மை இனத்தவர்களின் தலை மீதே திணிக்கப்படுகின்றன. இந்த நிலமை நீடிக்குமானால் சிறுபான்மை சமூகத்தினர் தமது அடிப்படை உரிமைகளை படிப்படியாக இழந்து விடுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

அம்பாறை மாவட்டதிலுள்ள அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள பொது மக்கள் அனைவரும் இவ்விடயத்தை விழிப்புடன் மாற்றி அமைக்க முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுக்கிறார்.

No comments:

Post a Comment