Tuesday, June 12, 2012

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

Tuesday, June, 12, 2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 647 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஐந்து சிறிய கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், இப்பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என்று எச்சரித்து அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இன்று காலை குறைந்த அளவு மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். கடந்த சனிக்கிழமை சென்ற போதும் இதே போல் இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்தனர். இதனால் மீன் பிடிக்க முடியாமல் குறைந்தளவு மீன்களுடன், மீனவர்கள் கரை திரும்பினர்.

தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்திருப்பது ராமேஸ்வரம் மீனவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது குறித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், ‘‘ஒரு முறை கடலுக்கு செல்லும் போது, விசைப்படகு ஒன்றுக்கு டீசல், பணியாளர்களுக்கான கூலி, உணவு என 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது. ஆனால் கடந்த இரண்டு முறையும் மீன் பிடிக்க முடியாமல் போனதால் 10 ஆயிரம் ரூபாய் மீன்களுடன் கரை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதே நிலை தொடர்ந்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நசிந்து போவது நிச்சயம். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து கச்சத்தீவு பகுதியில் நமது மீன் பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment