Thursday, June 14, 2012

புதுகையில் 73 சதவீத ஓட்டுபதிவு நாளை வாக்கு எண்ணிக்கை!

Thursday,June,14,2012
புதுக்கோட்டை::புதுக்கோட்டை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 73.48 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் சாலை விபத்தில் உயிரிழந்ததையடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, மதிமுக, பா.ஜ, விடுதலை சிறுத்தை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன. இதனால் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் ஆகியோரிடையே நேரடி போட்டி நிலவியது. பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலைக்கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் 73.48 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக கலெக்டர் கலையரசி இன்று தெரிவித்தார். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது. இதற்காக 10 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு இயந்திரத்திலும் எவ்வளவு வாக்குகள் பதிவாக இருக்கிறது என்பதை கண்காணிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஏஜெண்டுகள், அதிகாரிகளை கண்காணிக்கவும், வெளியில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கவும் தனித்தனியாக கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மதியம் 1 மணிக்குள் வாக்கு எண்ணும் பணி முடிவடைந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
.

No comments:

Post a Comment