Thursday, June 14, 2012

சுற்றுலா விசாவில் வந்த 7 இந்தியர்கள் கைது!:தமிழர்களை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்ட ஒருவர் கைது!:விபச்சார விடுதி முற்றுகை ஐவர் கைது!

Thursday, June, 14, 2012
இலங்கை::அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விசாவில் வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட 7 இந்திய பிரஜைகளை நேற்று புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து பொத்துவில் பிரதேசத்தில் வீடு வீடாக சென்று புடவை வியாபரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இந்திய பிரஜைகள் 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் துணிகளும் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று வியாழக்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்...

வட பகுதியிலிருந்து ரயில்மூலம் கொழும்பிற்கு பிரயாணம் மேற்கொள்ளும் தமிழர்களை அச்சுறுத்தி, பணத்தைக் கொள்ளையிட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்து, ரயிலில் வருகைதரும் நபர்களிடம் அடையாள அட்டைகளை சோதனையிடும் போர்வையில், சந்தேகநபர் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ரயில்வே பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட நபர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்...

விபச்சார விடுதி முற்றுகை நான்கு பெண்கள் உட்பட ஐவர் கைது!

சப்புகஸ்கந்த-பியகம அசோக மாவத்தையில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அதிலிருந்து ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் அலவ்வ, பியகம மற்றும் யஹலதெமன்ன பகுதிகளைச் சேர்ந்த 30 தொடக்கம் 50 வயது நிரம்பியவர்களாவர்.

சந்தேகநபர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் நேற்று (13) மாலை ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 12 பேர் கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 12 பேர் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment