Thursday, June 14, 2012

2008 இல் கொழும்பில் 5 இளைஞர்கள் காணாமல் போனமை சம்பந்தமான வழக்கு விசாரணை ஆரம்பம்!

Thursday, June, 14, 2012
இலங்கை::2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி இரவு கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் 5 இளைஞர்கள் காணாமல் போனமை சம்பந்தமான வழக்கின் சாட்சியங்கள் விசாரிக்கும் நடவடிக்கைகள் கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டன.

காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னர், இது சம்பந்தமாக சாட்சியங்களை விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய சாட்சியங்கள் விசாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் போது சாட்சியமளித்த காணாமல் போன இளைஞர் ஒருவரின் தாய், தனது மகனை, விமானப்படையை சேர்ந்த சம்பந்த முனசிங்க, கேர்ணல் ஹெட்டியாராச்சி ஆகியோர் கடத்திச் சென்றதாக தனக்கு அறிய கிடைத்ததாக தெரிவித்தார்.

காணாமல் போன தனது மகன் தொலைபேசியில் தொடர்புக்கொண்ட தன்னை திருகோணமலை துறைமுகத்தில் தடுத்து வைத்து;ளளதாக அறிய தந்ததாகவும் பின்னர் அவர் பற்றி எந்த தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த சாட்சியாளர், தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர் தனது மகனை விடுவிக்க 10 லட்சம் ரூபா பணத்தை கேட்டதாகவும் கூறியுள்ளார்.

சாட்சியாளர் சார்பில் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜரானதுடன் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி கயந்த விஜேசூரிய ஆஜரானார்.
மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி பதிவுசெய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் அனைத்து சாட்சியாளர்களையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment