Friday, ,May, ,25, 2012இலங்கை::பாராளுமன்ற தெரிவுக்குழுவை துரிதமாக நியமித்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரிவுக்குழுவின் பணிகளை முன்னெடுக்கவும் இங்கு எட்டப்படும் இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் ஐ.தே.க முழு ஒத்துழைப்பு நல்கும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அழைத்து வருவதற்காக திட்டமொன்றை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றை த. தே. கூட்டமைப்பிற்கும் ஜே. வி. பியிற்கும் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியதாவது,
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இந்தப் பிரச்சினை ஆரம்பமான காலம் முதல் ஐ.தே. க இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மிடையிலான பேச்சுவார்த்தைக்கு ஐ.தே. க தனது ஒத்துழைப்பை வழங்கியது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்தவும் நாம் எமது ஒத்துழைப்பை வழங்கினோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டும்.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சு முறிவடைந்தது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில், தெரிவுக்குழுவை உடனடியாக நியமித்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கும் த. தே. கூட்டமைப்பிற்கும் இடையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எட்டப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவுக்குழுவில் கவனம் செலுத்துவதோடு நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தவேண்டும். தெரிவுக் குழுவின் பேச்சுவார்த்தைகளை இந்த வருடத்தினுள் நிறைவு செய்வதானால் ஜூன் மாதத்தில் அதன் பணிகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
கடந்த பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தது குறித்து ஆராய்வதை விடுத்து துரிதமாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐ.தே. க வுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வெற்றிகரமான சந்திப்பொன்று இடம்பெற்றது. தெரிவுக்குழு மற்றும் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டது. தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விருப்பம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
தெரிவுக் குழுவில் இடம்பெறுவது தொடர்பிலான எதிர்க் கட்சிகளின் கூட்டமைப்பு மற்றும் ஒழுங்குப்பத்திரம் என்பவற்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு ஐ.தே.க அரசாங்கத்தைக் கோரியுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பான யோசனை அடங்களாக நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை செயற்படுத்தல் 13 ஆவது திருத்தத்தை செயற்படுத்தல் என்பன உள்ளடங்கிய நேர அட்டவணையொன்று தயாரிக்கப்படவேண்டும். இது தொடர்பான எமது நேர அட்டவணை த. தே. கூக்கும் ஜே. வி. பி. யிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றுக்கான சூழலை ஏற்படுத்தும் எமது யோசனைக்கு அரசாங்க தரப்பில் ஒதுவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற் குமிடையிலான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சகல முடிவுகளுக்கும் ஐ.தே. க தனது ஒத்துழைப்பை வழங்கும்.
No comments:
Post a Comment