Thursday, May 24, 2012

சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் கட்டும் பணி துவங்கியது!

Thursday, May, 24, 2012
சென்னை::சென்னை விமான நிலையத்தில் ரூ.48 கோடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று துவங்கியது. 48 கோடியில் 5 மாடிகள் கொண்ட கட்டிடத்தை 14 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை 23 கி.மீ. தூரம் அமையும். 2வது வழித்தடம், சென்ட்ரலில் இருந்து புனித தோமையார் மலை வரை 22 கி.மீ. தூரம் அமையும்.

கோயம்பேட்டில் இருந்து புனித தோமையார் மலை வரை 12.3 கி.மீ. தூரம் உயர்த்தப்பட்ட பாதையில், மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. விமான நிலையம் பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் தூண்கள் மற்றும் தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் சிமெண்ட் சிலாப்கள் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டது. கோயம்பேடு , புனித தோமையார் மலை இடையே 17 ரயில் நிலையங்கள் வருகிறது. தற்போது ரயில் நிலைய கட்டுமான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணி நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விமான நிலைய ஆணையத்துக்கும் , சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த மெட்ரோ நிலையம், 17,300 சதுர மீட்டரில் ஐந்து மாடிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கீழ் தளம் மற்றும் தரை தளம் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்ய பயன்படுத்தப்படும். முதல் தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்கான வழியும், 2வது தளம் டிக்கெட் வாங்கவும், 3வது தளம் ரயில் நிற்கும் இடம் என 5 தளங்கள் இருக்கும்.

விமான நிலையத்தில் கட்டப்பட உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பை, விமான நிலைய ஆணையம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
ரயில் நிலையம் ஸீ 48 கோடியில் கட்ட ஈரோட்டை சேர்ந்த யுஆர்சி கன்ஸ்டெக்ஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 14 மாதத்தில் கட்டி முடிக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பூமி பூஜையை திட்ட நிர்வாக இயக்குனர் எஸ்.பதூரி தொடங்கி வைத்தார். சென்னை விமான நிலையத்தின் உயர் அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment