Wednesday, May 2, 2012

தாயகத்தின் மீது அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு செயற்பட வேண்டும்: மே தின கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, May 02, 2012
இலங்கை::இன, மத, குல, மொழி பேதங்களை மறந்து நாட்டுக்கு முதலிடம் அளித்து நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் ஒன்றுபட்டு கைகோர்க்க முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கொழும்பில் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாட்டு அழுத்தங்கள் மூலமும், சூழ்ச்சிகள் ஊடாகவும் எந்த சக்தியாலும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க நாம் ஒருபோதும் இடமளியோம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப் பிட்டார்.

ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமை என்ற போர்வையில் மரபுரிமைகளை ஏப்பமிட நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐக்கிய மேதின பொதுக் கூட்டம் கொழும்பு மாநகரசபை மைதா னத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

வரலாறு காணாத அளவு பெருந்திரளான மக்கள் நாட்டின் நாலாபுறங்களில் இருந் தும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று உலக தொழிலாளர் தினம். இத்தின நிகழ்வில் பங்குபற்றுவதற்காக நாட்டின் நாலா புறங்களில் இருந்தும் இங்கு கூடியுள்ள பெருந்திரளான மக்க ளுக்கு முதற் கண் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். அதே போல் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மே தினத்தைக் கொண்டாடுபவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

இங்கு கூடியிருப்பவர்கள் தம் தாயின் மீது அன்பு செலுத்துவது போல் நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாவர். இன்று எல்லா தொழிற்சங்கங்களும் ஒரே கொடி யின் கீழ் ஒன்றுபட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், ஹட்டன், நுவரெலியா உட்பட நாடெங்கிலும் மேதினக் கூட்ட ங்கள் நடைபெறுகின்றன.

அச்சம், பீதியின்றி நாட்டின் எல்லா புறமும் நடமாடும் சூழல் ஏற்பட்டிருப்பதற்கு இந்த மேதினக்கூட்டங்கள் நல்ல எடுத் துக்காட்டுகளாக விளங்குகின்றன. அதனால் பயங்கரவாதம் காரணமாக பலவருடங்களாக பின்னடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக இங்கு வாழும் சகலரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் மேதினத்தை கொண்டாடும் ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ் நூலகத்தை எரித்தமைக்கும் அவர்களின் வாக்குரிமையை கொள்ளையடித்ததற்கும் மன்னிப்பு கேட்டிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

அன்று அவர்கள் கொழும்பில் இருந்து கொண்டுதான் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்கோ, கிளிநொச்சிக்கோ செல்லவில்லை. ஆனால் இன்று அவர்கள் அங்கு சுதநந்திரமாக நடமாடுகிறார்கள், படகுகளில் பயணிக்கிறார்கள்; பங்கர்களை பார்வையிடுகின்றார்கள்.

நாம் பெற்றுக் கொடுத்திருக்கும் சுதந்தி ரத்தின் பெறுமதியையும், மகத்துவத்தையும் அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இதேநேரம் நாடெங்கிலும் உட்கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாடு புதிய பாதை யில் பயணிக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் யாழ். சென்றிருப்போர் அங்கு இடம்பெறு கின்ற துரித அபிவிருத்திகளை கண்களால் நேரே பார்த்திருப்பார்கள் என்று நம்புகி றேன். நாம் எந்த அரச நிறுவனத்தையும் தனியார் மயப்படுத்தவில்லை.

அதேநேரம் வியாபாரிகள் தேசிய வளங்களையும் சூறையாட இடமளியோம். அவர்கள் அரச ஊழியர்களை 6 லட்சமாக குறைத்தார்கள். நாம் அரச ஊழியர்ககளின் எண்ணிக்கை பதின் மூன்றரை லட்சமாக அதிகரித்திருக்கிறோம். தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது அரச தொழிலில் இருக்கிறார். எமது இளைஞர்களின் சக்திக்கு உரிய இடத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

உலகம் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுத்த போது நாம் அதனை தூர நோக்கின் அடிப்படையில் எதிர்கொண் டோம். எமது விவசாய பொருளாதாரத்தை தன்னிறைவு மிக்கதாக மேம்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. அதன் பலாபலன்களை இப்போது மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர் களுக்கும் பொறுப்புகள் உள்ளன. நமது நிறுவனங்களை பாதுகாத்துக் கொண்டு தாயகத்தையும் பாதுகாக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் இல்லையென நாம் கூறவில்லை. அவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினை களை கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் பதவிக்கு வரும்போது சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் முழுமையாக தனியார் மயப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் இலங்கைக்கென தனித்துவமான விமான சேவை ஒன்றை ஆரம்பித்தோம். என்றாலும் சொற்ப காலத்தில் சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் எமது நிர்வாகத்தின் கீழ் வந்தது.

நாம் நாட்டின் வளங்களை பாதுகாத்து நாட்டின் பெருமையை உலகில் உயர்த்தி யுள்ளோம். நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். இவ்விடயத்தில் தொழிலாளர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறான சூழ்நிலையில் ஏகாதிபத்திய வாதிகள் மனித உரிமைகள் என்ற போர்வையில் எமது நாட்டை அடிமைப் படுத்த நினைக்கிறார்கள். ஆனால் இலங்கை இறைமையும், தன்னாதிக்கமும் கொண்ட சுதந்திரமான நாடு. எமக்கு அளிக்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை அவர்கள் நீக்கினார்கள்.

ஆனால், எமது மக்கள் அதற்கு தகுந்த பதிலளிக்கும் வகையில் சிறந்த உற்பத்திகளை மேற்கொள்கிறார்கள். இதனூடாக அந்நியச் செலாவணி அதிகளவில் கிடைக்கப்பெறுகின்றது. இன்று நாம் வலுவான பொருளாதாரத்தையும், ஸ்திரமான அரசாங்கத்தையும் கட்டியெழுப்பி யுள்ளோம். ஒரு நாடு தெளிவான பாதை யில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அந்நாட்டு மக்களும் தலைநிமிர்ந்து வாழ்வார்கள். அவ்வாறான சூழ்நிலையை நாம் உருவாக்கியுள்ளோம்.

சிலரது சிந்தனை, தாம் ஐரோப்பாவில் வாழ்வதாகவே உள்ளது. அவர்களது பாதங்கள் தான் இலங்கையில் இருக்கின்றன. இவர்கள் தான் இலங்கையை காட்டிக் கொடுக்கிறார்கள். இந்த செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். நாம் ஜனநாயக விழுமியங்களில் முழுமையாக நம்பிக்கை வைத்தவர்கள். மக்களின் வாக்குரிமையை நாம் ஒருபோதும் பறிக்க மாட்டோம். ஆனால், சூழ்ச்சிகள் மூலமும் வெளிநாட்டு அழுத்தங்களில் ஊடாகவும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

இன்று தன்னைப்பற்றி, குடும்பத்தைப் பற்றி, சமூகத்தைப் பற்றி, இனத்தைப் பற்றி, மதத்தைப்பற்றி, குலத்தைப்பற்றி சிந்திப்பவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் இந்த அனைத்து பேதங்களையும் மறந்து நாட்டுக்கு முதலிடம் அளித்து நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபட்டு கைகோர்க்க வேண்டும்.

தாயகத்தின் மீது அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மைத்தி ரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம். அதாவுல்லா, தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளசி, மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதி அமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஏ.எச்.எம். அஸ்வர், பிரபா கணேசன் உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற எம்.பிக்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment