Thursday, May 24, 2012

புகலிடக் கோரிக்கையாளர்களின் சார்பில் அவுஸ்திரேலியாவில் வழக்கு!

Thursday, May, 24, 2012
புகலிடக் கோரிக்கையாளர்களின் சார்பில் அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கால வரையறையின்றி புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்படும் நடவடிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனத் தெரிவித்து அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது தொடர்பில் கால அடிப்படையில் மீளாய்வு நடத்தப்பட வேண்டுமென பிரபல சட்டத்தரணி டேவிட் மென்னி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பொவுன், குடிவரவுத் திணைக்கள செயலாளர், மெல்பர்ன் இடைத்தங்கல் முகாம் பொறுப்பாளர் உள்ளிட்ட ஐந்து தரப்பினர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பெயர் குறிப்பிடப்படாத இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது கட்சிக்காரர் மிக நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 50க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுதல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சட்டத்தரணி மென்னி சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படாது ஆயுள் தண்டனை விதிக்கப்டுவதற்கு நிகராக புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment