Thursday, May 31, 2012

'சர்ச்சை புகழ்' ராணுவத் தளபதி வி.கே. சிங் இன்று ஓய்வு: ஆனால்.. விசாரணை ஆரம்பம்!

Thursday,May,31,2012
புதுடெல்லி::ராணுவத்திற்கு தீங்கு செய்வதாக ராணுவத் தளபதி வி.கே.சிங் மீது, முன்னாள் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு செயாலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராணுவ அமைச்சகத்துக்கு, தேஜிந்தர் அனுப்பிய புகார் மனுவில், '31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் வி.கே.சிங் மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ராணுவ ரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டதன்மூலம் நாட்டிற்கு எதிராக சதி செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்களை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். எனவே அவர் மீது ராணுவச் சட்டப்பிரிவு 123-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தாங்கள் ஆணையிட வேண்டும். வி.கே.சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் நான்கு பேர் மீது உடனடியாக ராணுவச் சட்டப்பிரிவு 63-ன் கீழ் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தகுதியானவர் நீங்கள் தான்’ என்று கூறியிருந்தார்.

வி.கே.சிங் ஓய்வுபெறும் முன்னர் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே ராணுவ அமைச்சரிடம் புகார் செய்ததாகவும் தேஜிந்தர் குறிப்பிட்டுள்ளார். ராணுவச் சட்டப்பிரிவு 123-ன் படி ராணுவ அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் பணியிலிருக்கும்போது செய்யும் தவறுகளுக்காக, அவர்கள் ஓய்வுபெற்று 3 ஆண்டுகளுக்குள் வரை அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ராணுவ அதிகாரி வி.கே.சிங் மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆதாரங்களுடன் புகார் கூறியிருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து தேஜிந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தேஜிந்தர் சிங் ராணுவ புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்தபோது 2010-ம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனது பதவிக் காலத்தின் கடைசி சில மாதங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் இன்று (மே 31) ஓய்வு பெறுகிறார்.

62 வயதாகும் சிங், ராணுவத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கிழக்கு பிராந்திய கமாண்டராக உள்ள ஜெனரல் விக்ரம் சிங், புதிய ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார். அவர் இந்தப் பதவியில் 2 ஆண்டுகள் 3 மாதங்கள் இருப்பார்.

2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பொறுப்பேற்றார். நேர்மையான அதிகாரியான அவர், முதலில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். ராணுவ செயலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஜெனரல் அலுவலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1951 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் ஓய்வு பெறும் வயது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே அவர் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசு சொல்ல, அடுத்த ஆண்டு தான் எனக்கு உண்மையான ரிடையர்மென்ட் ஏஜ் என்று பிடிவாதம் பிடித்தார் சிங். ஆனாலும் கடைசியில் அரசு சொன்னது போல இன்று ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து ராணுவத்தின் வலிமை குறித்து பிரதமருக்கு இவர் எழுதிய ரகசிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்ததாக தரக்குறைவான டாட்ரா கவச வாகனங்களை ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் ரூ. 14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சிங்.

இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையே தனது பதவிக் காலத்தின் கடைசி நாட்களைக் கடந்த சிங் இன்று ஓய்வு பெறுகிறார்.

இந் நிலையில் தேஜிந்தர் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய வி.கே. சிங் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment