Friday, April 13, 2012

பிரதி அமைச்சர் வி.முரளிதரனின் புதுவருட வாழ்த்துச் செய்தி!

Friday, April, 13, 2012
இலங்கை::எமது நாட்டில் பண்டைய காலம் முதல் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொண்டுவரும் பண்டிகையாகத்திகழும் சித்திரைப் புத்தாண்டிலே எமது தமிழ், சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.இந்த சித்திரைப் புதுவருடமானது ஒவ்வொருவருக்கும் நல்ல சக்தியையும், வளத்தினையும் வழங்குவதாக இருக்கட்டும். ஒரு நாட்டின் ஆத்ம சக்தி கிராமிய மக்களின் விவசாயப் பொருளாதாரத்தில் தங்கியிருக்கிறது.

அதே போன்று அனைத்துத் துறைகளிலும் சிறப்பான முறையில் செயற்படுவதன் மூலமே நாட்டின் வளர்ச்சியையும், அபிவிருத்தியையும், பொருளாதார பலத்தையும் கண்டு கொள்ள முடியும்.

அந்தவகையில் ஒவ்வொரு துறையினரும் சிறந்து விளங்கி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இத்தினத்தில் உறுதிபூணுவோமாக. நாளை மலரும் நந்தன புதுவருடத்தில் தமிழ், சிங்கள புத்தாண்டு இந்நாட்டு மக்களுக்கு மேன்மை பெற்ற சமாதானத்தையும், சாந்தியையும் கொண்டு வரவேண்டும்.

எமது நாட்டின் பாரம்பரியங்கள், கலாசாரங்கள் தமிழ், சிங்கள இனங்களிடையே பரஸ்பரம் பரிமாறப்படவும், மேம்படுத்தப்படவும் இந்தப் புதுவருடம் ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

அந்த வகையில் எமது கலாசாரங்கள், பண்புகள், போன்றவற்றை எமது எதிர்கால சந்ததியினருக்கு உவந்து கொடுக்கும் முக்கியமானதொரு தினமான இந்தப் புதுவருட தினத்தில் நல்ல காரியங்களைச் செய்வதற்கும், பெரியவர்களைக் கனம் பண்ணுவதற்கும், மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதற்கும் எமது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்போமாக.

எமது ஜனாதிபதியின் இனங்களிடையே ஒற்றுமையை வளர்த்து, நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி மக்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்போம் என்ற எண்ணக்கருவுக்கு ஏற்ப நாம் அனைவரும் உறுதியுடன் செயற்படும் இத்தருணத்தில் அதனை மேலும் வலுப்படுத்த இந்தப் புதுவருடம் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

பொதுமக்களுக்கான நற்பணியை நிறைவேற்றுவது அரசாங்கத்தினால் மாத்திரம் சாத்தியமல்ல. எங்கள் நாட்டின் சகல அரசியல் கட்சிகளும், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று, நாட்டுப்பற்றுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நற்பணிகளுக்கும், அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பூரணமானதும் இதய சுத்தியுடனானதுமான ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

உலகின் அனேக நாடுகளில், அரசியல்கட்சிகள் தமது கொள்கைகளின் கீழ் செயற்பட்டாலும், நாடு, நாட்டின் அபிவிருத்தி என்கிற போது ஒற்றுமையுடனேயே தொழிற்படுகின்றனர். அவ்வாறானதொரு ஒற்றுமையுடனான வீறு நடைச் செயற்பாட்டுக்கு இந்த நந்தன புதுவருடம் வழி கோலட்டும்.

எமது நாடு முன்னேற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் கடுமையாக உழைப்பதே அவசியமானதும் கட்டாயமானதுமாகும். உழைப்பாழிகளே இலங்கையின் நாட்டுப்பற்றாளர்களாக இருக்க முடியும்.

இந்த புத்தாண்டுத் தினத்தின் மகத்துவத்தினை உணர்ந்து பணிவு, பெற்றேராரை பெரியோர்களை வணங்குதல், மத வழிபாடுகளில் ஈடுபடுதல் என்ற நல்ல விடயங்களில் ஈடுபடுவதுடன், உற்றார், உறவினர், நண்பர்களுடன் இன்சுவை உணவுகளை உண்டு மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்து, கிராமிய விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு பரஸ்பர நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எதிர்காலத்தின் தேவை கருதி தீய சிந்தனைகளையும், நோக்கங்களையும் விடுவித்தவர்களாக நாட்டின் மேன்மைக்கும், அமைதிக்கும் பாடுபடுபவர்களாகவும், ஒற்றுமைக்கு தூபமிடுபவர்களாகவும்நாம் ஒவ்வொருவரும் மாறவேண்டும்.

எமது தேசத்துக்கும், மக்களுக்கும் இன்பமான காலங்களே தொடர இந்த புதுவருட தினத்தில் பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் 2012ஆம் ஆண்டு நந்தன வருட இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment