Wednesday,April,11,2012மதுரை::மதுரை விரகனூர் ரிங்ரோட்டில் வருகிற 28,29 ஆகிய 2 நாட்கள் பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பந்தல் அமைக்கும் பணியை மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ’மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் எல்.கே.அத்வானி, நிதின்கட்காரி, சுஷ்மாசுவராஜ், நரேந்திரமோடி, பாரதீய ஜனதா கட்சியின் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். மாநாட்டில் புதிதாக ஒரு லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைகிறார்கள்’.
மேலும், ‘28ம் தேதி மாநாடு தொடங்குகிறது. 29ம் தேதி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. 30ம் தேதி பாரதீயஜனதாவின் சாதனை குறித்து கண்காட்சி நடக்கிறது. இலங்கை தமிழர்களை பார்ப்பதற்காக சுஷ்மா சுவராஜ் தலைமையில் குழு இலங்கை செல்கிறது. இந்த குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி நானும், இல.கணேசனும் வருகிற 14ம் தேதி பிரதமரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்’ என்றும் அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் மாநில செயலாளர்கள் சுரேந்திரன், வானதி சீனிவாசன், பொதுச்செயலாளர் சரவணப்பெருமாள், அமைப்பு செயலாளர் மோகன்ராஜூலு, மாநில நிர்வாகி சசிராமன், மாவட்ட தலைவர் ராஜரத்தினம், பொதுச்செயலாளர் குமாரலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment