Wednesday, April 4, 2012

நீங்கள் சொன்னபடி கூட்டம் நடத்துறோம்.. தயவு செய்து வந்துருங்க.. ஜெயலலிதாவுக்கு ப.சிதம்பரம் கடிதம்!.

Wednesday,April,04,2012
புதுடெல்லி::தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக மே 5ம் தேதி மாநில முதல்வர்களின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் தொடர்பான சுற்றறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியது. இந்தச் சுற்றறிக்கையின் சில பிரிவுகள் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவது போல் உள்ளதாகவும், அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

இதுதொடர்பாக விவாதிப்பதற்காக, உடனடியாக மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் அவர் கோரினார். ஆனால், இது குறித்து பதிலே சொல்லாமல் அமைதி காத்து வந்தது மத்திய அரசு.

இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தனது வேட்பாளரை வெல்லச் செய்ய அதிமுகவின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த விவகாரத்தில் ஜெயலலிதா பாஜக ஆதரவு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துவிடாமல் தடுக்கவும் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இதையடுத்தே ஊரக குடிநீர் திட்டத்தை தமிழகம் சிறப்பாக நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவை ஏகத்துக்கும் பாராட்டிய மத்திய அரசு, தமிழகத்துக்கு திடீரென கூடுதல் நிதி ஒதுக்கியது.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் குறித்து விவாதிப்பதற்காக மாநில முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பியுள்ள கடிதத்தில்,

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக முதல்வர்களின் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல்கள், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் போன்ற காரணங்களால் ஏப்ரல் 16ம் தேதிக்கு இந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பதை எதிர்த்து பிரதமருக்கு நீங்கள் கடிதம் எழுதினீர்கள். அதைத் தொடர்ந்து, வேறு மாநில முதல்வர்களும் கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து, முதல்வர்களின் ஆண்டுக் கூட்டத்தில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் விவாதப் பொருளாகச் சேர்க்கப்பட்டது.

எனினும் இதுதொடர்பாக முதல்வர்கள் கூட்டத்தை தனியாக நடத்த வேண்டும் என்று நீங்கள் கோரியதைத் தொடர்ந்து, மே 5ம் தேதி இந்தக் கூட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என பிரதமர் கூறியுள்ளார். இந்த விவரத்தை மாநில முதல்வர்களிடம் தெரிவிக்குமாறும், அவர்களை இந்தக் கூட்டத்துக்கு அழைக்குமாறும் என்னிடம் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக ஏப்ரல் 16ம் தேதியும், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் தொடர்பாக விவாதிப்பதற்காக மே 5ம் தேதியும் மாநில முதல்வர்கள் கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதை நீங்கள் தயவு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் அந்தக் கடிதத்தில் சிதம்பரம்.

தமிழக மீனவர்கள் பிரச்சனை தீர நடவடிக்கை:

அதே போல நடுக்கடலில் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக இந்திய, இலங்கை அரசுகள் மட்டத்தில் மட்டுமின்றி இரு நாட்டு மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் அளவிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இரு தரப்பு மீனவர்களும் பிரச்னையின்றி கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட வகை செய்யும் வரைவு அறிக்கையை தயாரித்துள்ளனர். அவை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவரம் மாநில அரசுக்கும் தெரியும்.

மீனவர்கள் பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இரு நாடுகளிடையே நீடிக்கும் நல்லுறவைத் தடுக்க சிலர் முயல்கிறார்கள் என்றார் ப. சிதம்பரம்.

No comments:

Post a Comment