Friday, April, 20, 2012கவுகாத்தி::அசாம் மாநில சட்டசபை பொன்விழா மற்றும் டாக்டர் பி பரோகத் புற்று நோய் ஆஸ்பத்திரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் பயணமாக அசாம் செல்கிறார்.
பிரதமர் மன்மோகன்சிங்கின் அசாம் பயணத்துக்கு உல்பா தீவிரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரதமர் அசாம் வரும் நாளில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். அன்றைய தினம் பயங்கர நாசவேலையில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புக்கு மாநில அரசு ஏற்பாடு செய்து உள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நேற்றுமுன்தினமே நிறுத்தப்பட்டு விட்டன. மேலும் 7-க்கும் மேற்பட்ட ரெயில்களில் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
உல்பா தீவிரவாதிகள் எதிர்ப்பை தொடர்ந்து முக்கிய ரெயில் தண்டவாளங்களை போலீசாரும் ராணுவத்தினரும் இணைந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அசாம் மாநிலம் ஷிரங் மாவட்டத்தில் பிஜினி ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மானேஸ்வரி என்ற இடத்தில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் போலீசார் நேற்று காலையில் சோதனை செய்தபோது அங்கு சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு வயர்களுடன் இணைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
அதன் மொத்த எடை 3 கிலோ ஆகும். அதில் 2 டெட்டனேட்டர்கள் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த வெடிகுண்டை அதிகாரிகள் கைப்பற்றி செயல் இழக்க வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வேறு எங்காவது வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறதா? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என போலீசார் பின்னர் தெரிவித்தனர்.
உல்பா தீவிரவாதிகளின் 12 மணி நேர முழுஅடைப்பு போராட்டம் இன்று அதிகாலை 5 மணி அளவில் தொடங்க உள்ள நிலையில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு கண்டுபிடித்து இருப்பது போலீசார்மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் விமான நிலையத்தில் இருந்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment