Thursday, April 5, 2012

பீதி கிளப்பிய ராணுவ புரட்சி சர்ச்சை : தலைமை தளபதியை விசாரிக்க கோரிக்கை!

Thursday, April 05, 2012
புதுடெல்லி::ராணுவ புரட்சிக்கு முயற்சி நடந்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு முப்படைகளின் துணை தளபதிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தளபதி வி.கே.சிங்கிடம் விசாரணை நடத்த வேண்டும் என நிலைக்குழு உறுப்பினர்கள் இருவர் கோரிக்கை வைத்துள்ளனர். பிறந்த தேதி தொடர்பாக எழுந்த சர்ச்சையால் தலைமை ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வி.கே.சிங் வழக்கு தொடர்ந்தார். ஆனால், இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. அதே நேரத்தில் தனது மனுவை வி.கே.சிங் வாபஸ் பெற்றார். இரு தரப்பிலும் சமரசம் ஏற்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. சில நாட்களுக்கு பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த வி.கே.சிங், ராணுவத்துக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் ஆயுதங்கள் வாங்கினால் தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் தர ஒருவர் முன்வந்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதுபற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.

பின்னர், நாட்டின் பாதுகாப்பு விஷயமாக பிரதமருக்கு வி.கே.சிங் எழுதிய ரகசிய கடிதம் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் ராணுவ புரட்சிக்கு முயற்சி நடந்ததாக வந்த செய்தி, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘கடந்த ஜனவரி 16,ம் தேதி நள்ளிரவு அரியானா மாநிலம் ஹிசார், உ.பி. மாநிலம் ஆக்ராவில் (இரண்டும் டெல்லிக்கு அருகில் இருப்பவை) முகாமிட்டிருந்த ராணுவத்தின் இரண்டு படைப்பிரிவுகள் டெல்லி நோக்கி நகர்ந்தன. இதுபற்றி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து படைகள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் முகாமுக்கு திரும்ப பாதுகாப்பு அமைச்சகம் உத்தர விட்டது. இது ராணுவ புரட்சிக்கான முயற்சியாக இருக்கலாம்’ என ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘இது மக்களிடையே பீதி கிளப்பும் செய்தியாகும். இதற்கு யாரும் அதிக முக்கியத்துவம் தரக்கூடாது. இந்த செய்தியில் உண்மை எதுவும் இல்லை’ என்றார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் அந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் பாதுகாப்பு செயலர் சசிகாந்த் சர்மா மற்றும் முப்படை துணை தளபதிகள் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அவர்களது பதிலில் சந்தேகம் இருப்பதாக நிலைக்குழு உறுப்பினர்கள் நரேஷ் குஜ்ரால் (அகாலி தளம்) மற்றும் அசாதுதீன் ஒவைசி (எம்ஐஎம்) கருத்து தெரிவித்துள்ளனர். படைகளை வேறு இடத்துக்கு செல்லுமாறு உத்தரவிடுவது வழக்கமான ஒன்று என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது எதற்காக டெல்லிக்கு வெளியே அந்த படைகளை தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். மேலும், மலேசியா சென்றிருந்த பாதுகாப்பு செயலர் சசிகாந்த் சர்மா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியது ஏன் என உறுப்பினர்கள் இருவரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக தலைமை தளபதி வி.கே.சிங்கிடம் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என நிலைக்குழு தலைவர் சத்பல் மகாராஜூக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். தலைமை தளபதியிடம் விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருப்பது டெல்லியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment