Sunday, April 8, 2012

டெல்லியில் உற்சாக வரவேற்பு : மன்மோகனுடன் சர்தாரி சந்திப்பு!

Sunday, April, 08, 2012
புதுடெல்லி::பாகிஸ்தான் அதிபர் சர்தாரி இன்று காலை டெல்லி வந்தார். பிரதமர் மன்மோகன் சிங், அவருக்கு பிரமாண்ட விருந்தளித்து உபசரித்தார். பின்னர் அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடத்த சர்தாரி புறப்பட்டு சென்றார். சர்தாரி வருகையை முன்னிட்டு டெல்லி, அஜ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய - பாகிஸ்தான் உறவை மேம்படுத்த இருநாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக தடையில்லா வர்த்தகம் குறித்து பேச்சு நடந்தது. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் கடும் மின் பற்றாக்குறை பிரச்னை நிலவுவதால், மின்சாரம் வழங்கி உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் வழியாக பாகிஸ்தானுக்கு 500 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்ய ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் 8ம் தேதி (இன்று) சிறப்பு பிரார்த்தனை செய்ய தனிப்பட்ட பயணமாக இந்தியா வர முடிவு செய்தார். அதன்படி தனி விமானத்தில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து சர்தாரி இன்று பகல் 11 மணியளவில் டெல்லி வந்தார். அவருடைய மகன் பிலாவல் சர்தாரி (24) மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் வந்தனர். சர்தாரிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் இல்லத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்திலும் சர்தாரி பங்கேற்கிறார். முன்னதாக அவரை மன்மோகன் வரவேற்று உபசரித்தார். இருவரும் சிறிது நேரம் பேசினர். அஜ்மீர் தர்காவுக்கு வருவதுதான் முக்கிய பயண திட்டம் என்பதால், மரியாதை நிமித்தமாகவே சர்தாரி டெல்லி வந்திருக்கிறார். எனவே, முக்கிய பிரச்னைகள் குறித்து பேச்சு இருக்காது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி உள்பட மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு, டெல்லியில் இருந்து புறப்பட்டு சர்தாரி, அஜ்மீர் செல்கிறார். அங்குள்ள புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் அவர் முக்கால் மணி நேரம் இருந்து சிறப்பு பிரார்த்தனை செய்கிறார். பின்னர், இன்றைய தினமே இஸ்லாமாபாத் திரும்புகிறார். 2005-ல் மனைவி பெனசிருடன் சர்தாரி அஜ்மீர் தர்காவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது....

ஆஜ்மீர் தர்காவில் சர்தாரி பிரார்த்தனை: 2 மணி நேரத்துக்கு பார்வையாளர்களுக்கு தடை!

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் கவாஜா மொய்ன் துதீன் சிஷ்டி தர்கா உள்ளது. இது 13-ம் நூற்றாண்டு காலத்து வரலாற்று சிறப்பு மிக்கது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு இருந்தார். இப்போது அவர் ஆஜ்மீர் வந்து செல்ல மட்டுமே திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் மதிய விருந்துக்கு அழைத்ததால் டெல்லிக்கும் சென்றார். டெல்லியில், பிரதமரின் மதிய விருந்து முடிந்ததும் சர்தாரி தனது குழுவினருடன் டெல்லியில் இருந்து விசேஷ விமானத்தில் ஜெய்ப்பூர் வந்தார்.

சங்கனிர் விமான நிலையத்தில் அவரது விமானம் தரை இறங்கியது. சர்தாரியுடன் அவரது மகன் பிலாவல் உள்பட 38 பேர் கொண்ட பாகிஸ் தான் தூதுக்குழுவினரும், 6 இந்திய அதிகாரிகளும், ஜெய்ப்பூர் வந்தனர். அங்கிருந்து 4 ஹெலிகாப்டர்களில் ஆஜ்மீர் செல்கிறார்கள்.

ஆஜ்மீர் புறநகர்ப் பகுதியான கோக்ராவில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 4ஹெலிகாப்டர்களும் தரை இறங்குகிறது. அங்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்தாரியை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு வர வேற்கிறார்கள். காரில் பயணம் ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் செய்து தர்கா செல்கிறார்கள்.

தர்காவை அடைந்ததும் சர் தாரி, அவரது மகன் பிலாவல், மந்திரி மாலிக் உள்ளிட்டோர் மலர் கூடை சுமந்து பிரார்த்தனை நடத்துகிறார்கள். சர்தாரி வருகையையொட்டி ஆஜ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சர்தாரியுடன் வருவோர் பட்டியலை பாகிஸ்தான் தூதரகத்திடம் இருந்து ஆஜ்மீர் மாவட்ட நிர்வாகம் பெற்று அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சர்தாரி தர்காவில் 35 நிமிடங்கள் இருப்பார். மலர் கூடை சுமந்து வந்து தர்காவில் மலர் போர்வை சாத்தி பிரார்த்தனை செய்கிறார். தர்கா வளாகத்தை சுற்றிவந்து பார்வையிடுகிறார். இதனால் அவர் தர்கா வந்து செல்லும் வரை 2 மணி நேரத்துக்கு பார்வையாளர்களுக்கும், பக்தர்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சர்தாரியை தர்கா கமிட்டி தலைவர்கள், ஊழியர்கள், வி.ஐ.பி. வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் செல்கிறார்கள். சர்தாரிக்கு நினைவுப்பரிசும் வழங்குகிறார்கள். தர்காவை சுற்றிலும் ஆயிரக்கணக்கில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆஜ்மீரின் முக்கிய இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உயரமான கட்டிடங்களில் நின்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சர்தாரி ஆஜ்மீர் வருவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2005-ம் ஆண்டு தனது மனைவி பெனாசிருடன் ஆஜ்மீர் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது,

No comments:

Post a Comment