Saturday, April 14, 2012

கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவி எமது கட்சிக்கே – சுபைர்!

Saturday, April, 14, 2012
இலங்கை::கிழக்கு மாகாணத்திற்கான முதலமைச்சர் பதவியை அரசு எமது கட்சிக்கே தர வேண்டிய வரலாற்றுக்கடனாகும் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட முக்கியஸ்தருமான எம்.எஸ்.எம்.சுபைர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஏறாவூர் மீராகேணி கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இடம்பெற்ற தையல் பயிற்சிப் பட்டறை அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை விரைவில் கலைக்கப்படும் எனும் ஊகங்கள் தற்போது ஊடகங்களில் வெளியாகின்றன. எது எவ்வாறிருப்பினும் 05 வருடங்கள் பூர்த்தியாகாமலும் அமைச்சரவையின் அங்கீகாரமின்றி அதேபோன்று முதலமைச்சரின் அனுமதியின்றியும் மாகாண சபையை கலைக்க முடியாது.

ஊழல்கள் இடம்பெற்றால் மாத்திரம் ஆளுநருக்கு மாகாண சபையை கலைக்க முடியும்.

இது இவ்வாறிருக்க மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு மேலும் ஒரு வருடம் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறுவதன் மூலம் மூவின மக்களின் விருப்பத்திற்குரிய ஜனநாயக பண்புகளைக் கொண்ட கடந்த கால அரசியல் வாழ்க்கையில் அபிவிருத்திப் பாதையில் எண்ணிலடங்காத சேவைகளையாற்றிய ஒரு அரசியல் வாதியே தேர்வு செய்யப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அரசாங்கம் எமது கட்சிக்கு தரவிருக்கின்ற வரலாற்றுக்கடன் இம்முறை எமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன். இம்முறை அரசாங்கம் எமது கட்சிக்கு தரவிருக்கின்ற வரலாற்றுக்கடனை பெற்றுத்தருகின்ற முழுப்பொறுப்பும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திற்கு உள்ளது என சுபைர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment