Saturday, April 7, 2012

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மெரினாவில் 6000 பேர் மெகா சூரிய நமஸ்காரம்!

Friday, April, 06, 2012
சென்னை::உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இன்று காலை நடந்த சூரிய நமஸ்காரத்தில் சிறுவர், சிறுமிகள் உள்பட 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இன்று உலக சுகாதார தினம். இதை முன்னிட்டு வாழும் கலை அமைப்பு சார்பில் இன்று காலை மெரினா கடற்கரையில் யோகாதான் என்ற பெயரில் மெகா சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேயர் சைதை துரைசாமி முன்னிலை வகித்தார். இதில் 5 முதல் 80 வயது வரை உள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தனர். அது மட்டுமல்லாமல் யோகாவும் செய்து காட்டினர். ஏராளமான சிறுவர், சிறுமிகள் பங்கேற்று யோகா செய்து காட்டியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதுகுறித்து வாழும் கலை அமைப்பு ஆசிரியர் ஜாஹூர் உசேன் கூறியதாவது:

சூரிய நமஸ்காரம் மற்றும் யோகாசனங்களை தவறாமல் பழகுவதால் சிறந்த ஆரோக்கியத்தை பெற முடியும் என்று பல தனிப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் சூரிய நமஸ்காரத்தை கற்றுக் கொள்ளவும் அதை பிரபலப்படுத்தவும் நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 12.5 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சென்னை உள்பட 140 இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் 44 சிறைகளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகளும் இதில் பங்கு கொண்டனர். திஹார் சிறையில் 3,800 பேர் 108 சுற்று செய்யும் சவாலை ஏற்றுக் கொண்டனர். தமிழகத்தில் புழல் உள்பட 4 மத்திய சிறைகளில் சூரிய நமஸ்காரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார். மெரினாவில் நடந்த நிகழ்ச்சியில், 108 சூரிய நமஸ்காரத்தை விடாமல் தொடர்ந்து செய்தவர்களுக்கு தங்க சான்றிதழ் வழங்கப்பட்டது. 108 சுற்றுகள் சூரிய நமஸ்காரம் முடிப்பவர்களுக்கு ஸ்பிரிட் அப் யோகா சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment