Saturday, April 14, 2012

நாமக்கல் அருகே லாரி மீது பஸ் மோதல் : 5 பயணிகள் பரிதாப பலி!

Saturday, April, 14, 2012
சேந்தமங்கலம்::நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே இன்று அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது கர்நாடக மாநில அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பெங்களூரில் இருந்து தமிழகத்துக்கு ஆன்மிக சுற்றுலா வந்த 5 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (50). சுற்றுலா ஏஜென்டான இவர், அதே பகுதியை சேர்ந்த 52 பேரை தமிழகத்தில் உள்ள நவக்கிரக கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். இதற்காக கர்நாடக அரசு பஸ்சை முன்பதிவு செய்து பெங்களூரில் இருந்து எல்லாரும் நேற்றிரவு 10.30 மணியளவில் புறப்பட்டனர். இன்று அதிகாலை 5 மணியளவில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. நான்கு வழிப்பாதையில் புதுச்சத்திரம் பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது பஸ் வேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் இருந்த சுற்றுலா பயணிகள் இடிபாட்டில் சிக்கி கூச்சல் போட்டனர். முன் சீட்டில் அமர்ந்திருந்த ஏஜென்ட் கருணாநிதி, அவரது அண்ணன் மகள் தனலட்சுமி (24), கருணாநிதியின் மகன் நவீன் (25), தேவன் (35) ஆகியோர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். புதுச்சத்திரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 7 பெண்கள் உள்பட 15-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கும் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உமாபதி (56) என்பவர் சிறிது நேரத்தில் இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டவுடன் பஸ் டிரைவரும், லாரி டிரைவரும் தப்பியோடிவிட்டனர். நாமக்கல் ஏடிஎஸ்பி சுப்புலட்சுமி, டிஎஸ்பி சுப்பிரமணி ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பஸ் டிரைவர் தூக்கத்தில் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணிகள் எடுத்து வந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் ரோட்டில் சிதறிக் கிடந்தன. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆன்மிக சுற்றுலா வந்தவர்களில் 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டிரைவர் தூங்கிவிட்டார் : உயிர் தப்பிய பெண் கதறல்

ஆன்மிக சுற்றுலா வந்த பெங்களூரை சேர்ந்த தீபா என்ற பயணி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து அவர் கூறியதாவது: பெங்களூரில் இரவு 10.30 மணிக்குதான் புறப்பட்டோம். அதிகாலை நேரத்தில் சேலம் வரும்போதே டிரைவரின் போக்கு சரியில்லாமல் இருந்தது. பஸ் தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சை நிறுத்தினோம். டிரைவருக்கு டீ வாங்கிக் கொடுத்து ஒரு மணி நேரம் ரெஸ்ட் கொடுத்தோம். ஒரு மணி நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் புறப்பட்டோம். ஆனால், டிரைவர் மீண்டும் தூங்கியதால் லாரியில் மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. கோயில்களுக்கு செல்ல ஆர்வமுடன் வந்த 5 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். டிரைவரின் தூக்கமே இந்த விபத்துக்கு காரணம் கூறி என கதறி அழுதார்.

No comments:

Post a Comment