


Wednesday,April,11,2012இலங்கை::இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள 8.8 ரிச்கர் அளவு பூமியதிர்ச்சியால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கேயுள்ள ஆச்சே மாகாணத்தையண்டிய கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளுர் நேரப்படி 02.38க்குப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உணரப்பட்டுள்ளன.
இந்த நிலடுக்கம் ஆச்சே மாகாணத்தின் Banda Ache எனுமிடத்திலிருந்து 495 கி.மீ தூரத்திலுள்ள கடற்பரப்பில் 33 கி.மீ ஆழத்தில் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் இந்தியப் பெருங்கடல் பரப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பிரதேசங்களில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு, மேற்கு, தெற்குப் பிரதேசங்களிலும் இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்துள்ளதாக அறிய முடிகிறது. சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியாவின் சில பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
சுனாமிப் பேரலைகள் இலங்கை நேரப்படி மாலை 4 மணியளவில் கிழக்குக் கடற்கரையோரத்தையும், 4.50 மணியளவில் மேற்கு கரையோரப் பிரதேசத்தையும், 6 மணியளவில் வடக்கு கரையோரப் பிரதேசத்தையும் தாக்கக்கூடும் எனவும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.
மக்களை குழப்பமடையாது, பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் அனர்த்தமுகாமைத்துவ மைத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தெற்கு, கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்குமாறும், வசதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி கரையோரப் பிரதேசங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.
இந்தோனேசிய சுமத்ரா தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் ஆசியப் பிராந்தியத்தில் 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதுவரை சுனாமி அலை ஏற்பட்டதாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் 6 மீற்றர் உயரத்திற்கு அலைகள் ஏற்படக்கூடும் என CNN சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
எனினும், நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு மணி நேரம் கடந்துள்ள போதிலும் சுனாமி பேரலை ஏற்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இதுவரை தென்படவில்லை ஆசிய பசுபிக் சுனாமி அனர்த்த மைத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும், இதற்கு முன்னர் பாரிய சுனாமி அலைகள் ஏற்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் மேலிருந்து கீழ் பதிவாகியிருந்ததாகவும் எனினும், இந்த நிலநடுக்கம் சமாந்திரமாக ஏற்பட்டுள்ளதால் பாரியளவிலான அலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் குறைவு எனவும் அமெரிக்க பூகோலவியல் ஆய்வு மைத்திய நிலையத்தின் நிபுணர் ஒருவர் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 28 நாடுகளில் உள்ள கரையோரப் பிரதேச மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
எனினும், இந்த நிலையில் 17 சென்றிமீற்றர் உயரத்திலான அலைகள் இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தைத் தாக்கக் கூடும் பசுபிக் சுனாமி அனர்த்த மைத்திய நிலையம் எச்சரித்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment